வேலைவாய்ப்புகள் கிடைப்பதிலும் வசதியாக நடமாடுவதிலும் உடற்குறை உள்ளவர்களுக்குக் குறிப்பிடத்தக்க கூடுதல் உதவி கிடைக்கவுள்ளது. தடங்கல் இல் லாமல் நடமாடுவது, மின்னிலக்கமயத்தில் இணைவது, வேலை ஆதரவுச் சேவைகளைக் குடியிருப்பு வட்டாரங்களுக்குக் கொண்டுவருவது, சிறப்புத் தேவை பள்ளிகளில் மென் திறன்கள் பாடத்திட்டத்தை வலுவாக்குவது போன்ற விவகாரங்கள் குறித்து இரண்டு பணிக்குழுக்கள் முன்வைத்த 21 பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உதவித் திட்டங்கள் உருவாகி வருகின்றன.
உடற்குறைபாடு உள்ள 300 பேர், அவர்களின் குடும்பத்தார் மற்றும் பராமரிப்பாளர்கள், உடற்குறை தொடர்பில் இயங்கி வரும் சமூகச் சேவை அமைப்புகள் ஆகிய தரப்புகளிடமிருந்து ஈராண்டு காலம் திரட்டப்பட்ட கருத்துகளைக் கொண்டு பரிந்துரைகள் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது.
இப்பரிந்துரைகளை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று அறிவித்தது.
அமைச்சுகளும் அமைப்புகளும் சென்ற ஆண்டு முதல் ஒரு சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இவ்வாண்டு இரண்டாம் பாதியிலிருந்து மேலும் பல பரிந்துரைகள் படிப்படியாக அமலாக்கம் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உடற்குறையுள்ளோரை மேலும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்கும் மூன்றாவது துணைபுரியும் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக இரண்டு பணிக்குழுக்களும் 2019ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டன.
வேலைவாய்ப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட பணிக்குழு, எதிர்கால பொருளியலுக்கு உடற்குறையுள்ளோரைத் தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. பிறரைச் சார்ந்திருக்காத வாழ்க்கைச்சூழல் தொடர்பில் அமைக்கப்பட்ட பணிக்குழு, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு வழி உடற்குறையுள்ளோர் சார்பற்ற நிலையில் வாழ்வதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.
இரண்டு பணிக்குழுக்களுக்கும் தலைவராக உள்ள சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, "உடற்குறையிருந்தாலும் நம்மைப் போல் பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கித் தர நாங்கள் இத்தனை ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். தொழிலாளர் அணியில் மேலும் பல உடற்குறையுள்ளோர் சேர்க்கப்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இதற்காக அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்குவோம் அல்லது முதலாளிகள் கேட்டுக்கொள்ளும் பயிற்சியை நாங்கள் அளிப்போம்," என்றார்.
கல்வி அமைச்சு மறுஆய்வு
சிறப்புக் கல்விப் பள்ளிகளின் தொழில் பயிற்சி பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு மறுஆய்வு செய்யவுள்ள நிலையில், வேலைக்குத் தேவையான மென்திறன்களை வளர்ப்பது வலியுறுத்தப்படும். இதனால் வேலைச் சூழலுக்குச் சிறப்புக் கல்வித் தேவைகளுடைய மாணவர்களை மேலும் சிறப்பாகத் தயார் செய்ய முடியும் என்பது வேலைவாய்ப்பு பணிக்குழுவின் இலக்குகளில் ஒன்றாகும்.
நடமாட்டம் தொடர்பிலான
குறைபாடுகளைக் கண்டறிதல்
'சிபிடி' என்ற மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடமாட்டம் தொடர்பிலான குறைபாடுகள், வீடமைப்பு பேட்டைகளில் நடமாடுவதில் உள்ள குறைபாடுகள் ஆகிய இரு அம்சங்களையும் ஆராய, இரண்டு சமூக பங்காளிக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும்.
கட்டடச் சூழலில் உடற்குறையுள்ளோரின் நடமாட்டத்தை மேம்படுத்துவது, எளிதில் தகவல்களும் சேவைகளும் அவர்களுக்குக் கிடைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.

