நீரிழிவுக்கு எதிரான போரில் சிங்கப்பூர் கடந்த ஐந்தாண்டுகளில் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வந்துள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் 400 மில்லியனுக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருக்கும் இந்த நாட்பட்ட நோயைக் கையாள நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
குடிபானங்களில் கலக்கப்படும் சர்க்கரையின் அளவு தொடர்பான விளம்பரங்களில் கடும் விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டது முதல் நாடளாவிய சுகாதாரப் பரிசோதனை வரை பல்வேறு முயற்சிகள் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு இறுதிக்குள் கலன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இனிப்புப் பானங்களில் 'ஏ' முதல் 'டி' வரையிலான ஊட்டச்சத்துக் குறியீடுகள் அச்சிடப்பட வேண்டும். 'டி' குறியீடு உள்ள பானங்களின் விற்பனையைக் கடைகள் விளம்பரப்படுத்த முடியாது.
துடிப்பான வாழ்க்கைமுறை, உடற்பருமனைக் குறைக்க ஊக்குவிப்பதுடன் நீரிழிவுப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான ஆலோசனைகளை நிபுணர்களும் மக்களுக்கு வழங்குவதைப் பிரதமர் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
உலக சுகாதார அமைப்பின் 'குளோபல் டயபெட்டிஸ் காம்பேக்ட்' எனும் நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் லீ, நீரிழிவுப் பிரச்சினையைச் சமாளிக்க சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
முறையாக சிகிச்சை அளிக்கப்
படாவிட்டால் கடும் சிக்கல்களையும் அதனால் மரணமும்கூட நிகழும் சாத்தியமுள்ள நீரிழிவுப் பிரச்சினையைத் தடுப்பது, சமாளிப்பது ஆகியவற்றின் தொடர்பில் ஆற்றல் மிகு திட்டங்களை நாடுகள் நடைமுறைப்படுத்த இந்த 'குளோபல் டயபெட்டிஸ் காம்பாக்' உதவும்.
உலக மக்கள்தொகையில் 6 விழுக்காட்டினர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் அபாயம் நிலவுகிறது.
சிங்கப்பூரில் 400,000க்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மூவரில் ஒருவர் தங்களது வாழ்நாளில் நீரிழிவுக்கு உள்ளாகலாம்.
மருத்துவச் செலவு, செயல்
திறன் குறைபாடு போன்றவை காரணமாக நீரிழிவால் 2014ஆம் ஆண்டில் $940 மி. இழப்பு ஏற்பட்டது. வரும் 2050ஆம் ஆண்டுவாக்கில் அந்த இழப்பு $1.8 பில்லியனாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமாவதுடன் கொவிட்-19 உட்பட மற்ற சுகாதாரப் பிரச்சினைகளுக்கான சிகிச்சையையும் நீரிழிவு சிக்கலாக்குகிறது.
"நீரிழிவைத் தடுப்பது, எதிர்கொண்டு சமாளிப்பது போன்றவற்றின் தொடர்பில் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்பட்டு மக்களை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருப்போம்," என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 'குளோபல் டயபெட்டிஸ் காம்பேக்ட்' தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அரசாங்கப் பிரதிநிதிகளைத் தவிர நோயாளிகளும் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன் நீரிழிவுப் பிரச்சினை உள்ளவர்களின் பராமரிப்பு கட்டுப்படியாகக்கூடியதாக இல்லாத அம்சங்கள் பற்றியும் கருத்துரைப்பர்.

