துப்பாக்கி வைத்திருந்த ஏட்டோஸ் துணை காவல் அதிகாரி ஒருவர் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 15 ஆண்டுகளில் நிகழ்ந்த அத்தகைய முதல் சம்பவம் இது.
மஹாடி முகம்மது முக்தார், 38, எனும் அந்த ஆடவர் ஜூரோங் கேட்வே ரோட்டில் இருக்கும் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றில் $24,000க்கும் அதிகமான ரொக்கத்தை இம்மாதம் 12ஆம் தேதி பிற்பகல் 3.55 மணியளவில் கொள்ளையடித்துவிட்டுத் தப்பித்ததாகக் கூறப்பட்டது.
"இது ஒரு கொள்ளை. சத்தமிட வேண்டாம். என்னுடைய பையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. இருக்கும் பணம் முழுவதையும் இந்தப் பையில் போடு," எனும் பொருள்படும்படியான ஆங்கில வாசகத்தை எழுதிய குறிப்பை சம்பவம் நிகழ்ந்த நிறுவனத்தில் இருந்த ஊழியரிடம் மஹாடி காட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக நேற்று போலிஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அந்த ஊழியர் பணத்தைக் கொடுத்ததும் அதை எடுத்துக்கொண்டு தப்பினார் மஹாடி.
கொள்ளைச் சம்பவத்தின்போது துப்பாக்கியை வைத்திருந்த மஹாடி அதனை அந்த ஊழியரிடம் காட்டவில்லை எனவும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அவர் தனி ஆளாக நிகழ்த்தியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு சன் பிளாசா ஷாப்பிங் சென்டரில் உள்ள '4டி' கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது என்பதையும் போலிசார் நினைவுகூர்ந்தனர்.
அதீத விசாரணைகள், போலிஸ் கேமராக்கள் மற்றும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட படங்கள் ஆகியவற்றைக்கொண்டு குற்றவியல் விசாரணைப் பிரிவு, போலிஸ் விசாரணைப் பிரிவு, கிளமெண்டி போலிஸ் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஏட்டோஸ் ஊழியர்களின் உதவியுடன், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பணியில் இருந்த ஏட்டோஸ் துணைக் காவல் அதிகாரி என்பதை உறுதிசெய்தனர்.
கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த ஐந்து மணி நேரத்துக்குள் மஹாடி கைது செய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை கார்ப்பரேஷன் டிரைவ்வில் இருக்கும் ஏட்டோஸ் தலைமையகத்தில் பணிக்கு வந்த அந்த சந்தேக நபர் தான் பணிக்குச் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்வதற்கு முன்பாக தன்னுடைய துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டார் என மஹாடியின் பெயரைக் குறிப்பிடாமல் போலிசார் தெரிவித்தனர். பின்னர், தன்னுடைய சீருடையை மாற்றிக்கொண்டு தலைமையகத்திலிருந்து அனுமதியின்றி வெளியேறினார்.
குற்றச்செயலைப் புரிந்த பிறகு மஹாடி மீண்டும் அலுவலகத்தின் தலைமையகத்துக்குத் திரும்பி சீருடையை அணிந்துகொண்டு, அலுவலக வேனை ஓட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டிய இடத்துக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளையிட்ட பணத்தில் குறிப்பிடத்தக்க தொகையை தன்னுடைய 34 வயது தோழியின் கணக்கில் மஹாடி போட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து, திருடிய பொருளை நேர்மையின்றி பெற்றதாக அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
உரிமமின்றி கடன் வழங்குவோரிடமிருந்து தாம் பெற்றிருந்த கடனைத் திருப்பிச் செலுத்தும் பொருட்டு சில வங்கிக் கணக்கு களுக்கும் கொள்ளையிட்ட பணத்தின் ஒரு பகுதியை மஹாடி அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொள்ளையின் தொடர்பில் 16 முதல் 48 வயதுக்குட்பட்ட மேலும் 8 பேரை போலிசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் $17,500 மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலிஸ் தெரிவித்தது.
திட்டமிட்டு குற்றச்செயல் புரியும்போது சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருந்தது உட்பட குற்றச்சாட்டுகள் மஹாடி மீது நேற்று காலை நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் வரும் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையுடன் குறைந்தபட்சம் 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
நேற்று பிற்பகலில் அவரது தோழி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.
விசாரணையில் உதவி வரும் ஏட்டோஸ் நிறுவனம், "ஆயுதங்கள் ஏந்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது உட்பட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் துப்பாக்கி களைக் கொண்டு செல்லவும் பணிக்கும் தகுதியுள்ளவர்களா என்பதை உறுதி செய்ய துணைக் காவல் அதிகாரிகளுக்குக் கடுமையான விதிமுறைகள், பாதுகாப்பு நடைமுறைகள், கடும் நடத்தை விதிகள் போன்றவை விதிக்கப்படுகின்றன," எனக் குறிப்பிட்டது.
வேலையில் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்துவதற்காக நம்பி கொடுக்கப்பட்ட துப்பாக்கியை சந்தேக நபர் தவறுதலாகப் பயன்
படுத்தியதைச் சுட்டிக்காட்டிய குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் ஹவ் குவாங் ஹீ, அதிகாரிகள் துடிப்புடன் செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கப்படுவதற்கு முன்
பாகவே சந்தேக நபரைப் பிடித்துவிட்டனர் என்றார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த துணை ஆணையம் ஹவ் குறிப்பிட்டார்.

