சீன அதிகாரிகளைப்போல பாவனை செய்து $6.9 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டதன் தொடர்பில் போலிசார் 31 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் வங்கிகள் அல்லது சீன அதிகாரிகள் அழைப்பது போன்ற போலி கைபேசி அழைப்புகளைப் பெறுவதாக பலரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன.
சீன அதிகாரிகளைப்போல பாவனை செய்வோர், பொதுவாக, மறுமுனையில் பேசுவோரிடம் அவர்களது வங்கிக் கணக்குகள் மோசடி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவோ அல்லது கள்ளப் பணம் தொடர்பான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவோ குறிப்பிட்டு பணம் அனுப்புமாறு அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைத் தருமாறு கோருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், $5,000 முதல் $824,500 வரையிலான தொகையை மோசடி ஆட்கள் வழங்கிய வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினர். அவ்வாறு $6,920,000 மோசடி செய்யப்பட்டது.
மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதிவரை 19 வயது இளம்பெண், 22 மற்றும் 62 வயதுகளில் இரு ஆடவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலி அடையாள அட்டைகள் இருந்தன. மற்ற 28 சந்தேக நபர்கள் பண முதலை களாகச் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடிக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம். பாவனை செய்து ஏமாற்றுவோருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம்.

