சிங்கப்பூரின் குடிதண்ணீர் விநியோக முறையை மின்னிலக்க மயமாக்கும் தேசிய திட்டத்தையொட்டி, 'எஸ்பி சர்விசஸ்' நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 'விவேக தண்ணீர் பயனீட்டு அளவு கருவிகளை'ப் பொருத்த உள்ளது.
இதில் முதல் கட்டமாக 300,000 சாதனங்கள் பொருத்தப்படும். என்றாலும் பயனீட்டாளர்களுக்குச் செலவு எதுவும் இராது. தண்ணீர் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தச் சாதனங்கள் மின்னிலக்க தொழில்நுட்பங்களைக் கொண்டு கணக்கிடும்.
வீணாகும் தண்ணீரின் அளவும் தெரியவரும். இத்தகைய சாதனங்கள் ஏழு இடங்களில் வீடுகளிலும் வர்த்தக, தொழில்துறை கட்டடங்களிலும் முதற்கட்டமாகப் பொருத்தப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவித்துள்ளது. தெம்பனிஸ் நார்த், தெங்கா ஆகிய புதிய குடியிருப்புப் பேட்டைகளும் புக்கிட் பாத்தோக், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், தெம்பனிஸ், துவாஸ் ஆகியவையும் அந்த ஏழு இடங்களில் அடங்கும்.
இந்தக் கழகத்தின் விவேக கருவி செயல்திட்டத்தின் முதல் கட்டம் 2023ல் முற்றிலும் நிறைவேற்றப்பட திட்டம் இருக்கிறது. இந்த $123.7 மில்லியன் மதிப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற தகுதி உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று பகிரங்க ஏலக்குத்தகை மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டது.
ஏழு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மனு செய்தன. அவற்றில் இருந்து எஸ்பி சர்விசஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கழகம் தெரிவித்தது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்ப வளங்களும் ஆற்றலும் எஸ்பி சர்விசஸ் நிறுவனத்திடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வலுவான பல சாதனைகளை அந்த நிறுவனம் நிகழ்த்தி இருக்கிறது என்றும் கழகம் குறிப்பிட்டுள்ளது.
விவேகக் கருவிகளை விநியோகித்து அவற்றைப் பொருத்தி, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் எஸ்பி சர்விசஸ் பொறுப்பு எடுத்துக்கொள்ளும். அவற்றை 15 ஆண்டு காலம் பராமரித்து செயல்படுத்தி வருவதற்கும் அந்த நிறுவனமே பொறுப்பு.
புதிய கருவி பொருத்தப்படுவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கும் நிறுவனங்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனங்கள் தொடர்பான முன்னோடி பரிசோதனைத் திட்டங்கள் 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பொங்கோல் மற்றும் யூஹுவாவில் அமைந்துள்ள 800 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டன. அந்த வீடுகளில் ஏறத்தாழ 10 விழுக்காட்டு குடும்பங்கள் தங் களுக்குத் தெரியாமலேயே தண்ணீர் விரயமாவதைக் கண்டுகொண்டன. முதல் கட்டத்தைத் தொடர்ந்து அனைத்தையும் பரிசீலித்து பிறகு சிங்கப்பூரின் எஞ்சிய பகுதிகளுக்கு இந்தச் செயல்திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி கழகம் முடிவு செய்யும்.

