சிங்கப்பூரின் சொத்து முதலீட்டுச் சந்தை கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக 'கோலியர்ஸ்' சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சொத்துச் சந்தை முதலீட்டு விற்பனை 25.8% உயர்ந்துள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 47.9% அதிகரித்து, $3.8 பில்லியனை எட்டியது.
வணிக, தொழிலகச் சொத்துப் பிரிவில் முதலீடு கூடியதே இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது. நிறுவன இணைப்புகளையும் அரசாங்க நில விற்பனை நடவடிக்கைகளையும் இது உள்ளடக்கவில்லை.
சிங்கப்பூர் முதலீடு செய்யப் பாதுகாப்பான இடமாகத் திகழ்வது, தொழில்புரிய சாதகமான சூழல், பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றால் இவ்வாண்டிலும் சொத்து விற்பனை வலுவாக இருக்கும் என கோலியர்ஸ் எதிர்பார்க்கிறது.
75% ஊழியர்கள் பணியிடத்திற்குத் திரும்பலாம் என அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பது நடமாட்டத்தையும் பொருளியல் நடவடிக்கைகளையும் அதிகரிக்கும் என்று அந்நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் டிரிசியா சோங் குறிப்பிட்டார்.
2021 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் $1.1 பில்லியன் மதிப்பிலான வணிகச் சொத்துகள் விற்பனையாகியுள்ளன. இது காலாண்டு அடிப்படையில் 377% உயர்வு என்றும் ஆண்டு அடிப்படையில் 43.8% அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் தொழிலக முதலீட்டுப் பிரிவிலும் விற்பனை 141% கூடி, $1 பில்லியனாகவும் குடியிருப்பு முதலீட்டு விற்பனை 154% கூடி, $1.6 பில்லியனாகவும் உயர்ந்தன.

