லென்டோர் சென்ட்ரலில் ஒரு நிலப்பகுதிக்கு நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெம்பனிஸ் வட்டாரத்தில் ஒரு நிலப்பகுதிக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் ஏலக்குத்தகை கோரியுள்ளன.
அவை அமைந்துள்ள இடம், வீடமைப்புச் சந்தையின் அண்மைய நிலவரம், நிலப்பரப்புகளைச் சேர்த்து வைக்க வேண்டிய தேவை போன்ற காரணங்களால் தனியார் வீடுகளை அமைக்கும் அவ்விரு நிலப்பகுதிகளுக்கும் சொத்து மேம்பாட்டாளர்கள் இடையே கடும் போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லென்டோர் சென்ட்ரல் நிலப்பகுதியில் எழுப்பப்படும் தனியார் குடியிருப்புக் கட்டடங்களின் தரைத்தளத்தை வர்த்தக வெளியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் அமைந்துள்ள நிலப்பகுதி, எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
'லென்டோர் ஹில்ஸ் எஸ்டேட்' பகுதியில் அமைந்துள்ள, 17,279.9 மீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் 605 வீடுகளைக் கட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் வரவிருக்கும் லென்டோர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அவ்விடம் அமைந்து இருக்கிறது.
மொத்தம் 23,799.2 சதுர மீட்டர் பரப்பளவிலான தெம்பனிஸ் ஸ்திரீட் 62 நிலப்பகுதியில் 590 எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளைக் கட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

