பொருளியல் மீட்சியடையும் எனும் எதிர்பார்ப்பில் சீனப் புத்தாண்டிற்குப் பிறகு புதிய தனியார் வீடுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் 1,296 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகின. மார்ச் மாதத்தைப் பொறுத்தமட்டில், கடந்த 2017ஆம் ஆண்டைவிட இதுவே அதிகம். 2021 பிப்ரவரியில் 645 தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
2021 முதல் காலாண்டில் 3,574 புதிய தனியார் வீடுகள் விலைபோனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காலாண்டு அளவில், 2013 இரண்டாம் காலாண்டிற்குப் பிறகு இதுவே அதிகம் என்றும் அப்போது 4,538 வீடுகள் விற்பனையாகின என்றும் 'ஹட்டன்ஸ் ஏஷியா' நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் லீ ஸி டெக் கூறினார்.
எக்சகியூட்டிவ் கொண்டோமினியம் வீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மார்ச் மாதத்தில் 1,373 புதிய வீடுகள் விற்கப்பட்டன. இது முந்திய பிப்ரவரியைவிட 82 விழுக்காடும் ஓராண்டிற்கு முன்பிருந்ததைவிட 52 விழுக்காடும் அதிகம்.
மார்ச் மாதத்தில் விலைபோன புதிய தனியார் வீடுகளில் 44% வீடுகள் $1.5 மில்லியனுக்கும் குறைவானவை; 32.9% வீடுகள் ஒன்று முதல் இரண்டு மில்லியன் வெள்ளிக்கு இடைப்பட்டவை; 23.1% வீடுகள் $2 மில்லியனுக்கும் அதிகமானவை.
அவ்வீடுகளை வாங்கியோரில் சிங்கப்பூரர்கள் 82%, நிரந்தரவாசிகள் 13.4%, வெளிநாட்டினர் 4.3% என்றும் தெரிவிக்கப்பட்டது.

