புதிய பங்காளித்துவத்தில் சட்ட உதவி சேவைகள்

புதிய பங்காளித்துவத்தில் சட்ட உதவி சேவைகள்

2 mins read
96f7d88c-6148-4db9-9e86-aaa31795dec1
திறன் சார்ந்த தொண்டூழியம் 2021 திட்டம் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்ட கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் துணைச் செயலாளர் டாக்டர் அங் ஹக் செங்கும் (இடது) சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திரு கிரேகரி விஜயேந்திரனும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வைப் பார்வையிடுகிறார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பல்வேறு 'எஸ்ஜி கேர்ஸ்' தொண்டூழிய நிலையங்களின் தொண்டூழியர்கள், சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவையுடன் செய்துகொண்ட புதிய பங்காளித்துவ திட்டத்தின் மூலம் சட்ட நிபுணர்களின் ஆலோசனையையும் பெற்று சேவை செய்வார்கள்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கமும் நேற்று கையெழுத்திட்ட புரிந்துணர்வுக் குறிப்பு அவ்விரு அமைப்புகளின் தொண்டூழிய சேவையின் மற்றொர் அங்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

"எங்களிடம் உள்ள நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்கள் குழு, தொண்டூழியர் நிலையங்களுடன் இணைந்து சமூகத்துக்கு சேவையளிக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்றார் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவையின் தலைவர் திரு கிரேகரி விஜயேந்திரன்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நன்கொடை அமைப்பான சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவை, வசதி குறைந்த சட்ட ஆலோசனை உதவி தேவைப்படுவோருக்கும் சமூக அமைப்புகளுக்கும் இலவச சட்ட ஆலோசனை வழங்கி வருகிறது.

தனிநபர்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று கிட்டத்தட்ட 1,700 தொண்டூழியர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை, சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவையின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்றனர்.

நேற்று கையெழுத்தான உடன்பாடு மூலம், 'எஸ்ஜி கேர்ஸ்' எனும் தேசிய தொண்டூழிய இயக்கத்துக்கு சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவை, தேசிய அளவிலான இடைத்தரகு அமைப்பாக இருந்து, சட்டத் துறைக்குள் திறன் சார்ந்த தொண்டூழியத்தைப் பரப்பும்.

திறன் சார்ந்த தொண்டூழியம் என்றால், ஒருவரது நிபுணத்துவ ஆற்றல்களைப் பயன்படுத்தி, சமூகத்துக்குச் சேவையாற்றுதலாகும்.

சிங்கப்பூரில் தற்போது 14 தொண்டூழியர் நிலையங்கள் உள்ளன. அவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 24 ஆக உயரும் என்றார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்.

"தொண்டூழியர் சேவைகளை ஒருங்கிணைப்பது, தொண்டூழியர் நிர்வாகத் திறன்களை வளர்த்தல் போன்றவற்றுக்கு தொண்டூழியர் நிலையங்கள் பொறுப்பு வகிக்கும்.

"சமூகத்தில் சட்ட ஆலோசனை சேவைக்கு அதிக தேவை உள்ளதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, குடும்பம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பான பகுதிகளில் அது அதிகம் நாடப்படுகிறது.

"சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவையும் தொண்டூழியர் நிலையங்களும் கைகோத்திருப்பதால், அதிகமானோருக்கு உதவி சென்று சேரும்," என்று தெரிவித்தார் அமைச்சர் டோங்.

புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்துச் சடங்கில் பேசிய சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் இலவச சட்ட ஆனோசனை சேவையின் தலைவருமான திரு விஜயேந்திரன், "எங்கள் மின்னிலக்கத் தளங்கள் மற்றும் கட்டமைப்புப் பங்காளித்துவ அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து திறன் சார்ந்த தொண்டூழிய வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளை நாங்கள் அதிகப்படுத்துவோம்," என்று தெரிவித்தார்.