16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடுவதில் உள்ள பாதுகாப்பு அக்கறைகள்

16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடுவதில் உள்ள பாதுகாப்பு அக்கறைகள்

2 mins read
a49fb029-56a8-4447-8561-6d03e4d7df67
நியூயார்க்கில் ஹனா ரிவர் ஹோல்பர்க் எனும் 16 வயது பெண்ணுக்கு இம்மாதம் 6ஆம் தேதி ஃபைசர் நிறுவனத்தின் முதலாவது கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. படம்: ராய்ட்டர் -

கொவிட்-19 தடுப்பூசி வாய்ப்பு வரிசைப் பட்டியலில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் கடைசியில் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்குத் தடுப்பூசி போடலாம் என்ற அனுமதி கிடைப்பதற்கு முன்பு பல்வேறு ஆய்வுகளை நடத்தி பலவற்றையும் கண்டறிய வேண்டிய நிலை இருக்கிறது.

கொரோனா கிருமித்தொற்றுக்கு சிறார்கள் ஆளாகிவிடக்கூடிய ஆபத்து அதிகம் என்ற நிலை இல்லாவிட்டாலும்கூட ஒரு சமூகத்திற்கு நோய்த் தடுப்பாற்றல் தேவையெனில் அந்தப் பிரிவினருக்கும் தடுப்பூசி போட வேண்டியது உயிர்நாடியான ஒன்று என்று மருத்துவத் தொழிலர்கள் கூறுகிறார்கள்.

சிறார்களுக்கு எந்த தடுப்பூசியைப் போடுவது என்பதும் இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி 16 வயது குறைந்த பிள்ளைகளுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.

18க்கும் குறைந்த வயதுள்ளோருக்கு மொடர்னா தடுப்பூசியைப் போட வேண்டுமானால் அதற்கு முன்னதாக பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. 12 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள சிறார்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் பரிசோதனை அடிப்படையில் சோதித்து பார்க்கப்பட்டு வருகின்றன.

12 முதல் 15 வரைப்பட்ட பதின்ம வயதினர் 2,260 பேரிடம் 100% ஆற்றலை ஃபைசர்-பயோஎன்டெக் ஊசி வெளிப்படுத்தி இருக்கிறது. அதேபோல மொடர்னா 12 முதல் 17 வரை வயதுள்ள 3,000 பதின்ம வயதினரிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு தடுப்பூசி நிறுவனங்களும் 12 வயது குறைந்த சிறார்களிடம் பரிசோதனைகளைத் தொடங்கி இருக்கின்றன.

இதனிடையே, பிறப்பில் இருந்து 11 முதல் 12 வயது வரைப்பட்ட காலத்தில் ஒருவரின் உடலில் தடுப்பாற்றல் மிகவும் வளர்ச்சி அடையாத நிலையிலேயே இருக்கும். அல்லது அது முற்றிலும் செயல்படாத நிலையிலேயே இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் சில்வி அலோன்சோ கூறுகிறார்.

ஆகவே 11 வயது குறைந்த சிறார்களிடம் ஊசி ஏற்படுத்தக்கூடிய விளைவு, பெரியவர்களிடம் அந்த ஊசி ஏற்படுத்தக்கூடிய விளைவுகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இவ்வேளையில், பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் சிறார்களுக்கு ஒவ்வாமை அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆசிய பசிபிக் மருந்தக நுண்ணுயிரியல் சங்கத் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா கூறினார்.

ஆகையால் சிறார்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை ஆபத்துகள் பற்றி புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.