செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3c126ca6-b8d9-4d75-b77c-46b1a9f76ecb
-

திருமணத்துக்கு முந்தைய மதிப்பீட்டை மேற்கொள்ளும் சுமார் 3,920 ஜோடிகள்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டவர்கள் என்று பார்க்கும்போது, 2015ம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை அத்தகைய சுமார் 3,920 ஜோடிகள் திருமணத்துக்கு முந்தைய மதிப்பீட்டில் பங்கேற்றுள்ளனர்.

அத்தகைய மதிப்பீட்டில் வெற்றி பெறும் வெளிநாட்டவர், சிங்கப்பூரரை மணந்த பிறகு அனேகமாக நீண்டகால வருகை அனுமதி அட்டைக்குத் தகுதி பெறுவர்.

திருமணத்துக்கு முந்தைய நீண்டகால வருகை அனுமதி மதிப்பீடு, அந்த ஜோடிகள் தங்களுக்கிடையே தங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை அதாவது முன்னைய திருமணத்தில் தங்கள் வாழ்க்கைத் துணைகள், பிள்ளைகள், வருமானம், குற்றவியல் தகவல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரரை மணக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இங்கு 2015ல் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டில் 4,426 சிங்கப்பூர் ஆண்கள் வெளி நாடுகளைச் சேர்ந்த பெண்களை மணந்து கொண்டனர். அப்படி என்றால் ஐந்தில் ஒரு திருமண ஜோடிகளில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருப்பார் என்று 2020ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மக்கள் தொகை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சில காலம் ஒருவரை ஒருவர் அறிந்த பிறகு அல்லது சில காலம் இருவரும் பார்த்துப் பழகிய பிறகு, தங்கள் துணையைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ளாத நிலையில் அவர்களில் சிலர் திருமணப் பந்ததுக்குச் சம்மதிக்கின்றனர் என்று வெளிநாட்டு மனைவியருடன் பணியாற்றும் சமூக ஊழியர்களும் வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், திருமணத்துக்கு முந்தைய மதிப்பீடு, நீண்டகால வருகை அனுமதி பெற்றவுடன் தங்கள் வெளிநாட்டு வாழ்க்கைத்துணை எப்படிப்பட்ட சவால்களைச் சந்திக்கக்கூடும் என்பதை சிங்கப்பூரர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் விவரிக்கப்பட்டது. ஆகவே, இந்த மதிப்பீட்டை மேற்கொள்ளும்படி வெளிநாட்டினரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளும் சிங்கப்பூரர் களுக்கு உள்துறை அமைச்சு ஆலோசனை கூறுகிறது.

சிங்கப்பூரின் முதலாவது கரிம வெளியீடற்ற திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி

தெமாசெக் குழுமத்தின் பிரிவான 'பெவிலியன் எனர்ஜி' நிறுவனம், சிங்கப்பூரின் முதலாவது கரிம வெளியீடற்ற திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளது என்று தெமாசெக் நேற்று தெரிவித்தது.

எண்ணெய்க் கிணறு முதல் எண்ணெய் தொட்டி வரை யிலான பயணத்தில் கரிம வெளியேற்றம் அங்கம் வகிக் கிறது. அதில் பிரித்தெடுத்தல், போக்குவரத்து ஆகியவையும் உள்ளடங்கும். சுமார் 70,000 டன் திரவ இயற்கை எரிவாயு, எண்ணெய்க் கிணறு முதல் எண்ணெய் தொட்டி வரையிலான பயணத்தின்போது 60,000 டன் கரியமில வாயுவை வெளி யேற்றுகிறது.

சிங்கப்பூரின் எரிசக்தி கலவையில் 95 விழுக்காட்டை திரவ இயற்கை எரிவாயு கொண்டுள்ளது. சிங்கப்பூர், சூரிய சக்தி போன்ற இதர தூய்மையான எரிசக்தி வளங்களை நாடினாலும், திரவ இயற்கை எரிவாயு நாட்டின் எரிசக்தித் திட்டங்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

"தூய்மையான எரிசக்தியை வழங்குவதுடன் கரிம வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் எங்கள் நிறுவனத் தின் இலக்குகளில் முக்கிய மைல்கல்லாக கரிம வெளியீடற்ற திரவ இயற்கை எரிவாயு விளங்குகிறது," என்றார் 'பெவிலியன் எனர்ஜி' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு ஃபிரெடரிக் பர்நாட்.

புதிதாக 16 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி, புதிதாக 16 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 60,735.

நேற்றைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள் என்றும் அவர்கள் இங்கு வந்ததும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு அல்லது தனிமைப்படுத்தும் உத்தரவை நிறை வேற்றி வருகிறார்கள் என்றும் சமூக அளவிலோ அல்லது வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதியிலோ எவருக்கும் கிருமித்தொற்று இல்லை என்றும் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் ஓர் உள்ளூர் கிருமித் தொற்று குழுமம் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பாப்புவா நியூகினி நாட்டிலிருந்து வந்த 44 வயது ஆடவருக்கும் அதே நாட்டிலிருந்து வந்த அவரது சக ஊழியர்கள் இருவருக்கும் மேலும் அதே விமானம் மூலம் வந்த கொலம்பியா நாட்டவருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அமைச்சு கூறியது.

அந்த நோயாளி கடந்த மாதம் 25ஆம் தேதி, வேலை காரணமாக ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குறுகியகால வருகை அனுமதி மூலம் வந்தார்.