நன்கொடையுடன் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள்

நன்கொடையுடன் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள்

2 mins read
d14d07bd-0437-46a8-b9e5-2334d37fb349
பதினாறு இந்திய அமைப்புகளும் நிறுவனங்களும் இணைந்து வழங்கிய $15,000 தொகையை அதிபர் சவால் நிதிக்கான நன்கொடையாக, லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் திரு சி. சங்கரநாதன் (இடது) பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவிடம் வழங்கினார். படம்: லிஷா -

கி.ஜனார்த்தனன்

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சி மாறுபட்ட பாணியில் நடைபெற்றது.

அழைக்கப்பட்ட 50க்கும் குறைவான பார்வையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் 16 இந்திய அமைப்புகளும் நிறுவனங்களும் இணை ஏற்பாட்டாளர்களாகப் பங்கேற்றன.

பிஜிபி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆடல், பாடல் அங்கங்களின் காணொளிகள் பார்வையாளர்களுக்குக் காண்பிக்கப்பட்டன.

அத்துடன், லிஷா அமைப்பின் புதிய சின்னமும் நேற்று முன்தினம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பிஜிபி அரங்கத்தின் தரைத்தளத்தில் பல்வேறு இந்தியப் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பற்றி விளக்கும் கண்காட்சி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவிடம் இந்திய அமைப்புகள் அதிபர் சவாலுக்காக 15,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கின. இந்தத் தொகை, வசதி குறைந்தோருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப்படும்.

சவால்கள் நிறைந்த ஓர் ஆண்டைத் தாண்டி மீண்டுவரும் நிலையில் இந்திய அமைப்புகள் ஒன்றுகூடி புத்தாண்டைக் கொண்டாடுவது மனநிறைவளிப்பதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு பிரகாஷ் முனுசாமி தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் ஆதரவு தந்து வரும் இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் பங்காளி நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

பல்வேறு பங்காளித்துவ அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான கலைஞர்களும் உள்ளூர் நட்சத்திரங்களும் இணைந்து கடந்த மூன்று மாதங்களாக இந்நிகழ்ச்சிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்ததையும் அவர் சுட்டினார்.

தமிழ்ப் புத்தாண்டுடன் விஷு, வைசாக்கி, உகாதி என பல்வேறு இந்திய சமூகங்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இக்காலக்கட்டத்தில் இடம்பெறுவதைச் சுட்டிய குமாரி இந்திராணி, இந்தியக் கலாசாரத்தில் பன்முகத்தன்மை இருந்தாலும் கொண்டாட்டக் குதூகலத்தில் அவை ஒன்றுபடுகின்றன என்று கூறினார்.

தற்போதை கிருமிப் பரவல் சூழலால் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு இடையே இந்நிகழ்ச்சியை நடத்திய ஏற்பாட்டாளர்களைப் பாராட்டிய குமாரி இந்திராணி, இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் செழிப்பான அனுபவங்களை ஏற்படுத்தித் தரும் என்றார்.

இந்திய சமூகத்தைப் பற்றி பிற சமூகத்தினர் மேலும் தெரிந்துகொள்வதற்கு இந்நிகழ்ச்சியும் புத்தாண்டை ஒட்டிய கொண்டாட்டங்களும் வகை செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிருமித்தொற்றுப் பரவலுக்கு இடையே புதிய தொடக்கங்கள் முக்கியம் எனக் கூறிய குமாரி இந்திராணி, அனைவருக்கும் இவ்வாண்டு பாதுகாப்பாகவும் நல்ல பலனளிக்கக்கூடிய விதத்திலும் அமைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.