வட்ட ரயில் பாதையில் உள்ள மரினா பே எம்ஆர்டி ரயில் நிலையத்தின் இரண்டு தளமேடைகளில் ஒன்று மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள பயன் படுத்தப்படாத தண்டவாளத்தை அகற்றும் பணிகளுக்காக அந்த தளமேடை மூடப்படுவதாகவும் தளமேடை மூடப்படுவதால், வழக்கமான ரயில் சேவைகளில் எவ்வித தடங்கலும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறியது.
"தளமேடை மூடப்படுவது குறித்து, பயணிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் பதாகைகளும் நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்படும். மரினா பே நிலையத்துக்கும் புரோமினாட் நிலையத்துக்கும் இடையே ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டால், அது குறித்து வட்ட ரயில் பாதையிலும் அறிவிக்கப்படும்," என்றும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
பயன்படுத்தாத தண்டவாளப் பகுதிகளால் பேஃபிரண்ட் நிலையத்துக்கு அருகே தற்காலிக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் எஸ்எம்ஆர்டி சொன்னது.
தண்டவாளப் பகுதிகளை அகற்றும் பணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும்.

