செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2764f111-515b-4f49-9f0a-6a31e0642564
-

மோசடி செய்து இலவச முகக்கவசங்களைப் பெற்ற பெண்

50க்கும் மேற்பட்டோரின் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி இலவச முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டதாக பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிறருடைய தனிப்பட்ட விவரங்களைச் சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டது, மோசடி செய்து இலவச முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளை மலேசியரான 42 வயது கொக் பெக் கியேங் எதிர்நோக்குகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று 54 பேரின் அடையாள அட்டை எண்கள், பிறந்தநாள், முகவரிகள் ஆகியவற்றை கிளமெண்டி சமூக நிலையத்திலிருந்து அவர் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. இந்தத் தனிப்பட்ட விவரங்கள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இந்தத் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி தெமாசெக் அறநிறுவனத்துக்குச் சொந்தமான இயந்திரத்திலிருந்து 54 முகக்கவசங்களை அவர் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவர் மோசடி செய்து பெற்றுக்கொண்ட முகக்கவசங்களின் மொத்த விலை $648. அவர் $10,000க்குப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிறருடைய தனிப்பிட்ட விவரங்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விதிமீறிய கிக்ஸ்மார்ட் நிறுவனத்துக்கு $1,000 அபராதம்

உரிமம் பெறாத இடங்களில் உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக மீண்டும் பொட்டலம் கட்டிய குற்றத்துக்காக இணையம்வழி மளிகைப் பொருட்களை விற்கும் நிறுவனமான கிக்ஸ்மார்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உரிமையாளரான 57 வயது ஜுனாய்டா அகமதுக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு முகவை கூறியது.

மாவு, அரிசி, சீனி, பருப்பு வகைகள், உலர்ந்த இறால், உறையவைக்கப்பட்ட மீன் ஆகிய உணவுப் பொருட்களை ஊபி கிரசெண்ட் தொழிற்பேட்டையில் உரிமம் பெறாத இடத்தில் கிக்ஸ்மார்ட் நிறுவனம் மீண்டும் பொட்டலம் கட்டியதாக தெரிவிக்கப்பட்டது.