கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சட்ட
விரோத சந்திப்பு ஒன்றுக்கு ஆடவர் ஒருவர் ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கார் விற்பனையாளரான 31 வயது இயோ ஜிங் செங் ஏற்பாடு செய்த சந்திப்பு ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெற்றது. சந்திப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் 150 கார்கள் கூடியதாக தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 அபாயம் இருந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அதையடுத்து, எல்லா கார்களும் அங்கிருந்து பூன் லேயில் உள்ள ஜாலான் புரோவுக்குச் செல்ல இயோ ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
அவ்விடத்தை அடைந்ததும் துவாஸ் வட்டாரத்தில் அவர்களில் சிலர் சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்டனர். அதற்காக 100க்கும் மேற்பட்ட கார்கள் கூடின.
கொவிட்-19 கட்டுப்பாட்டை மீறியது, அபாயகரமாக கார் ஓட்டியது, 10க்கும் மேற்பட்டோருக்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை இயோ ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பு அளிக்கப்படும்போது பொய்த் தகவல் அளித்தது, தாம் ஏற்பாடு செய்த சட்டவிரோத சந்திப்பில் பங்கெடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்படும்.
தமது கார் வர்த்தகத்துக்கான வாடிக்கையாளர் கட்டமைப்பை விரிவுபடுத்த கார் சந்திப்பு ஒன்றை நடத்த இயோ விரும்பினார். அதற்காக அந்த சட்டவிரோத சந்திப்புக்கு அழைப்பிதழாக சுவரொட்டியை அவர் தயாரித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள மெக்டோனல்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் சந்திப்பு நிகழும் என அந்தச் சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டியை அவர் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பிவைத்தார்.
அந்த சந்திப்புக்கு நான்கு நாட்கள் இருந்தபோது கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி அத்தியாவசியமற்ற காரியங்களுக்கு
பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இயோ தாம் ஏற்பாடு செய்த சந்திப்பை ரத்து செய்யவில்லை. சந்திப்பு நடந்த இரவு 2.30 மணி அளவில் சட்டவிரோத கார் பந்தயம் குறித்து தகவல் கிடைத்ததாக போக்குவரத்து போலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர். போக்குவரத்து போலிசாரைக் கண்டதும் சட்ட
விரோத கார் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோர் அங்கிருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் இயோ கூறியதாக அறியப்படுகிறது. அழைப்பிதழ் படத்தை நீக்கிவிடும்
படியும் அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது கார் தொடர்பான மற்றொரு சட்டவிரோத செயலில் இயோ ஈடுபட்டார்.
வேக வரம்பை மீறி விரைவுச்சாலையில் கார் ஓட்டியதை இயோ ஒப்புக்கொண்டார்.

