அருமையான விருந்து, விரும்பிய பாட்டைக் கேட்பது, சம்பள நாள் ஆகிய மூன்றுமே சிங்கப்பூர்களுக்கு மிகவும் இன்பமானவையாக இருக்கின்றன.
ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளது. இணையம் வழி நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 1,000 பேர் உள்ளடக்கப்பட்டனர். அவர்களிடம் ஏறத்தாழ 60 வகையான மனமகிழ் அம்சங்கள் அடங்கிய ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டது.
அவற்றில் இருந்து விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுக்கும்படி சிங்கப்பூரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அருமையான விருந்தே தங்களுக்குப் பிடிக்கும் என்று 44 விழுக்காட்டினர் தெரிவித்தனர். விரும்பிய பாடலைக் கேட்பது தங்களுக்கு இன்பம் தருவதாக 40 விழுக்காட்டினர் கூறினர்.
சம்பள நாளே தங்களுக்கு மகிழ்ச்சியான மனம் கவர்ந்த நாள் என்று 37 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர். 'உலக சிறு ஆடம்பர ஹோட்டல்கள் நிறுவனம்' என்ற ஓர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த அமைப்புக்கு 90 நாடுகளில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த நிறுவனம் கேட்டுக்கொண்டதை அடுத்து 'ஒன்போல்' என்ற நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் ஆய்வை நடத்தியது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனிலும் ஆய்வு நடந்தது.
உடற்பயிற்சியும் பிடித்த திரைப்படங்களைப் பார்ப்பதும் சிலரை சிரிக்க வைப்பதும் தங்களுக்கு இன்பம் தருபவை என்று ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கூறினர்.
வாழ்வில் சிறுசிறு மன மகிழ்ச்சிகளில் ஈடுபடும் அளவுக்குத் தங்களுக்கு நேரம் இருப்பதில்லை என்று ஏறத்தாழ 48% தெரிவித்தனர்.
அதேவேளையில், ஓய்வு எடுக்கையில் தங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுவதாக 56% கூறினர்.
சிங்கப்பூரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை தடுக்கும் மிக முக்கியமான மூன்று காரணங்களில் பணமில்லாதது (57%), நேரமின்மை (55%), வேலை பளு (48) ஆகியவை அடங்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை சூரிய ஒளியில் குளிர் காய்வது சுகமானதாகத் தெரியவில்லை.
பட்டியல் போடுவது (9%), முதல் முறையாக காலுறையை அணிவது (11%) ஆகியவை சிங்கப்பூரர்களுக்கு இன்பமானவை பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
அகலமான, சுகமான படுக்கை (32%) சுகம் என்றும் வார முடிவு நாட்களில் வெளியே செல்வது மகிழ்ச்சி (31%) என்றும் அருமையான இயற்கை காட்சிகளை பார்த்து ரசிப்பது பிடிக்கும் (29%) என்றும் சிங்கப்பூரர்கள் கூறினர்.
இதனிடையே, தடுப்பூசியும் இரு தரப்பு பயண ஏற்பாடுகளும் இடம்பெறுவதால் மக்கள் விரைவில் பாதுகாப்பாக வெளிநாடுகளில் தங்களுக்குப் பிடித்த மனமகிழ்ச்சிகளில் ஈடுபட முடியும் என்று நம்புவதாக ஆய்வு நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மூத்த துணைத் தலைவர் மார்க் வோங் கூறினார்.

