சிங்கப்பூரின் எதிர்காலத்தை உருவாக்குவதற்குரிய புதிய மூன்று அம்சங்கள் முக்கியம் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் யோசனை தெரிவித்து இருக்கிறார்.
சமூகத்திற்கு மேலும் மதிப்பை உருவாக்குவது; சுற்றுச்சூழல் மற்றும் பரந்த அளவிலான சமூகத்தில் அக்கறை காட்டுவது, முன்னேற்றத்துக்கான பாதையை வகுப்பது ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
பணம், கார், கடன் அட்டை, கூட்டுரிமை வீடு, மனமகிழ் மன்ற உருப்பியம் ஆகிய ஐந்தும் முன்பு சிங்கப்பூரர்களின் கனவாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் அந்த விருப்பங்கள் இன்றைய இளம் சிங்கப்பூரர்களைப் பொறுத்த வரையில் இனிமேல் அந்த அளவுக்கு ஒத்து இருக்காது என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
"எப்போதுமே விருப்பங்கள் பரிணமித்து வருபவை. இளம் தலைமுறையினரிடையே அவர்களுக்குச் சொந்தமான விருப்பங்கள் இருக்கின்றன," என்று திரு ஹெங் தெரிவித்தார். சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் அமைச்சர் நிலைக் கருத்தரங்கு நேற்று நடந்தது.
அதில் கலந்துகொண்ட மாணவர்களிடையே திரு ஹெங் உரையாற்றினார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் வளர்ச்சியும் மேம்பாடும் வேறுபட்டு இருந்த ஒரு காலகட்டத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள். உலக கலாசாரத்திற்கும் செல்வாக்கிற்கும் சமூக ஊடகங்களுக்கும் நீங்கள் ஆளாகி இருப்பது அதிகம்," என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
நல்ல வாழ்க்கைத் தொழில், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வலுவான உறவைப் பேணி வளர்ப்பது, சொந்த குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகிய அடிப்படை விருப்பங்கள் இன்னமும் மிக முக்கியமானவையாக இருக்கின்றன என்பதை திரு ஹெங் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், மாற்றத்தை உருவாக்கி, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலுவான ஒரு விருப்பமும் இளையர்களிடம் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக்கொள்ள இருப்பதாக திரு ஹெங் சென்ற வாரம் அறிவித்தார்.
அதற்குப் பிறகு முதன்முதலாக நேற்று அவர் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சி நேரடியாகவும் மெய்நிகர் ரீதியிலும் நடந்தது.
மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதை வலியுறுத்திய துணைப் பிரதமர், சிங்கப்பூர் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதப்போவது மாணவர்களே என்றும் தெரிவித்தார்.
சமூகத்துடன் சேர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு சிங்கப்பூரையும் உலகத்தையும் இன்னும் சிறந்த வாழ்விடமாக ஆக்கும்படி மாணவர்களைத் துணைப் பிரதமர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

