தோ பாயோ லோரோங் 6ல் வியாழக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தை அடுத்து 6 வயது சிறுவன் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அந்த விபத்தை அடுத்து அலட்சியமாக வாகனம் ஓட்டி கடுமையான காயத்தை விளைவித்ததாகக் கூறி 51 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்தனர். அந்த விபத்து தோ பாயோ லோரோங் 6ல் உள்ள சாஃப்ரா வாகன நிறுத்தி வைப்பு இடத்தின் வாயிலில் நிகழ்ந்தது.
வரிக்குதிரை சாலைக் கடப்பைக் கடந்து கொண்டிருந்தபோது இடதுபுறமாக திரும்பிய ஒரு காரில் அந்தச் சிறுவன் அடிபட்டு வாகனத்திற்குக் கீழே மாட்டிக்கொண்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் வந்து சிறுவனை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புலன்விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

