சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப்படையில் மார்ச் மாதம் 12.1 விழுக்காடு அதிகரித்ததாக முன்னோடி மதிப்பீடுகள் காட்டுகின்றன.
பிப்ரவரியில் இந்த வளர்ச்சி 4.2 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த வளர்ச்சி 2.6 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க்கின் கருத்தாய்வு முன்னுரைத்து இருந்தது.
ஏற்றுமதி வளர்ச்சிக்கு சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மலேசியா ஆகிய சந்தைகள் பெரிய பங்களிப்பை அளித்துள்ளன.
மின்னியல் சாரா துறைகளின் எழுச்சியே ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரிப்புக்குக் காரணம் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது. மின்னியல் சாரா துறையின் வளர்ச்சி ஆண்டுக்காண்டு அடிப்படையில் மார்ச் மாதம் 9.4 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. பிப்ரவரியில் இத்துறை 3.2 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்தது.
மொத்த வளர்ச்சியில் எரிபொருள் ரசாயனத் துறையின் பங்கு 51.4 விழுக்காடு. 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் தேவை குறைந்திருந்தபோது இந்தத் துறை வீழ்ச்சி கண்டிருந்தது.
சிறப்புத்தன்மை வாய்ந்த இயந்திரங்களின் ஏற்றுமதி 35.1 விழுக்காடு வளர்ந்ததும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
பகுதி மின்கடத்திக்கான உலகளாவிய தேவை அதிகரித்தது இத்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.
பொதுவாகக் கொந்தளிப்புடன் காணப்படும் மருந்தாக்கத் துறையின் வளர்ச்சி மார்ச் மாதம் 25.5 விழுக்காட்டுக்கு ஏறியது. பிப்ர
வரியின் வீழ்ச்சிக்குப் பிறகு அத்துறை ஏற்றம் கண்டது.
எண்ெணய் சாரா ஏற்றுமதியில் இடம்பெற்றுள்ள முக்கிய துறையான மின்னியல் துறையின் வளர்ச்சி கடந்த மாதம் 24.4 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. ஓராண்டுக்கு முன்னர் அது அடிமட்டத்தைத் தொட்டிருந்தது. மேலும் கடந்த மாதத்தின் வளர்ச்சி பிப்ரவரியைக் காட்டிலும் 7.3 விழுக்காடு அதிகம்.
ஐசி (இண்டக்ரேட்டட் சர்க்யூட்) சாதன ஏற்றுமதி அதிகரித்ததே இத்துறையின் எழுச்சிக்கு முக்கிய காரணம். மேலும். பகுதி மின்கடத்திக்ககான தேவை வலுவடைந்ததற்கு மத்தியில் இந்த வளர்ச்சி சாத்தியமானது.
எரிபொருள் ரசாயனம், 'டையோட்' போன்ற பகுதி மின்கடத்தி சாதனங்கள், ஐசி போன்றவற்றின் ஏற்றுமதி ஈரிலக்கத்தைத் தொட்டிருப்பதை ஓசிபிசி வங்கியின் கருவூல ஆராய்ச்சி, உத்தித் துறைத் தலைவர் செலினா லிங் எடுத்துக்காட்டி உள்ளார்.
உலகளாவிய சில்லு பற்றாக்குறை சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் துறை வளர்ச்சிக்கு உதவி இருப்பது தெளிவாகத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.

