சிங்கப்பூரில் நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,769 ஆக உயர்ந்தது. சமூக அளவில் இருவர் பாதிக்கப்பட்டிருப்பதும் புதிய எண்ணிக்ைகயில் அடங்கும். மார்ச் மார்ச் 3ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் இரு சமூகத்தொற்று பதிவாகி இருப்பது நேற்றுதான்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று அதன் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
முன்னதாக, வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்களில் 10 பேர் இந்தியா, பங்ளாதேஷ், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த வொர்க் பெர்மிட் ஊழியர்கள்.
இதர ஆறு பேரில் மூவர் நிரந்தரவாசிகள். இந்தியாவிலிருந்தும் பிலிப்பீன்சிலிருந்தும் அவர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். இந்தியாவிலிருந்து இங்கு வந்திருந்த சார்ந்திருப்போர் அட்டைதாரர் ஒருவரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர். மற்ற இருவரில் ஒருவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த வேலை அனுமதி அட்டைதாரர். இன்னொருவர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூரில் உள்ள குடும்ப உறுப்பினரைக் காண வந்த குறுகிய கால வருகை அட்டைதாரர்.
இந்த 16 பேரும் கட்டாய இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றியபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் அனைவரிடமும் தொற்றுக்கான அறிகுறி காணப்படவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

