தம் முதலாளியிடமிருந்து திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் இல்லப் பணிப்பெண் பார்த்தி லியானி, அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திடமிருந்து இழப்பீடு கோரியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 359(3) பிரிவின் கீழ் இவ்வாறு இழப்பீடு கோரும் முதல் நபர் இந்தோனீசியரான திருவாட்டி பார்த்தி என நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையில் $10,000 வரையிலான இழப்பீட்டுத் தொகையைத் தர நீதிமன்றம் உத்தரவிடலாம். மேலும், குற்றச்சாட்டு 'அற்பமானது' அல்லது 'சினம் மூட்டும் தன்மையுடையது' என நீதிமன்றத்தில் நிரூபணமானால், இழப்பீடு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தனக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பீடு $73,100 என திருவாட்டி பார்த்தி குறிப்பிட்டிருப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. வழங்கப்படாத சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு, 'ஹோம்' என்ற குடியேறிகளின் பொருளியல் நிலைக்கான மனிதாபிமான அமைப்பில் தங்கியதால் நேர்ந்த $29,400 செலவு ஆகியவை இழப்பீட்டுத் தொகையில் அடங்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இழப்பீட்டுத் தொகையைக் கோருவதில் வரம்பு இருந்தாலும் தம் முன்னாள் முதலாளி மற்றும் பிரபலமான வர்த்தகருமான லியூ மன் லியோங்கிடமிருந்து திருவாட்டி பார்த்தி இழப்பீடு கோராமல் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திடம் கோரியுள்ளார்.
'நேர்மையற்ற தன்மை' அல்லது 'தீமை விளைவிக்கும் தன்மை' இருப்பதை நிரூபிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகம்மது ஃபைசால் கூறி, திருவாட்டி பார்த்தியின் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும், அவ்வாறு நிரூபிக்கத் தேவையில்லை என திருவாட்டி பார்த்தியின் வழக்கறிஞர் திரு அனில் பால்சந்தனி வாதாடினார்.
செப்டம்பரில் புகார் தொடர்பில் ஒழுங்கீன விசாரணை மன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

