சாப்பிட்டு முடித்தவுடன் தட்டுகளைத் திருப்பித் தருவதற்காக ஒதுக்கப்படும் இடவசதியைக் கூடுதலாக்கும் காப்பிக் கடைகள் மற்றும் கடைத்தொகுதி உணவங்காடி நிலையங்களுக்குப் புதிய நிதித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
பொது இடங்களில் உணவு சாப்பிட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் பயன்படுத்திய தட்டுகளை அப்புறப்படுத்துவது தொடர்பில் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான இயக்கத்தின் ஓர் அங்கம், இத்திட்டம்.
இதன்படி, உணவுத் தட்டுகளைத் திருப்பி வைப்பதற்காக கூடுதல் இடவசதியை ஒதுக்க, காப்பிக் கடைகளுக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் நிதி வழங்கப்படும்.
தேசிய சுற்றுப்புற அமைப்பால் தொடங்கப்பட்ட இந்த 'கிளீன் டேபல்ஸ்' ஆதரவுத் திட்டம் வழி, சுமார் 1,125 காப்பிக் கடைகளும் 220 உணவங்காடிகளும் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆதரவுத் திட்டம் முதன்முதலில் பிப்ரவரி மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, ஒரு சில உணவங்காடி நிலையங்களில் தட்டுகளைத் திருப்பித் தருவதற்கான இடவசதி மேலும் அதிகப்படுத்தித் தரப்பட்டது.
அதையடுத்து, இந்நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்டுகளை மீண்டும் வைக்கும் இடங்கள், கண்ணெதிரே இருப்பதுடன் வசதியாக இருந்தால் மக்கள் தங்களின் தட்டுகளைத் திருப்பித் தர ஊக்குவிக்கப்படுவர் என்றார் சுற்றுப்புற, நீர்வள அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்.
"சில சமயங்களில் தட்டுகளை வைப்பதற்கு போதுமான இடவசதி இருக்காது. பார்க்க முடியவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை என்ற நிலையில் அதைத் தேடிச் செல்ல நேரமும் சிலருக்கு இருக்காது," என்றார் டாக்டர் கோ.
வாடிக்கையாளர்கள் தங்களின் தட்டுகளைத் திருப்பித் தருவதால், துப்புரவாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் வேலைப் பளுவையும் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினார் அவர்.
பொதுச் சுகாதாரத் தரக் குறியீடுகளே, தொற்றுநோய்கள் பரவுவதற்கு எதிரான முதல் நிலை தற்காப்பு என்றார் அமைச்சர்.
இந்த புதிய ஆதரவுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மே 1ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படலாம். தங்களுக்கு ஏற்படும் செலவில் பாதியை இத்திட்டம் வழி காப்பிக் கடைகளும் உணவங்காடி நிலையங்களும் சரிகட்டலாம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, தட்டுகளை வைப்பதற்காக மேலும் 75 இடங்களை உணவங்காடி நிலையங்களில் தேசிய சுற்றுப்பற அமைப்பு அமைக்கவுள்ளது. ஏற்கெனவே, 111 நிலையங்களில் உள்ள 900 இடங்களுக்கும் கூடுதலாக இவை அமைந்திடும் என்று கூறப்பட்டது.
துப்புரவுத் துறையில் ஊழியர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பெரிதும் கைகொடுக்கும் என்று கூறிய உணவுக் கடைக்காரர்கள், புதிய திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

