இர்ஷாத் முஹம்மது
நோய்ப் பரவல் சூழலிலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து பணி செய்துவரும் 'சிங்கப்பூர் போஸ்ட்' அஞ்சலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊழியர்களுடனான நோன்புத் துறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் இந்த நோன்புத் துறப்பு நிகழ்ச்சி, இம்முறை நோய்ப் பரவல் சூழலால் மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், அமைச்சின் மூத்த துணை அமைச்சர் திருவாட்டி சிம் ஆன் இருவரும் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்களுக்குத் நன்றி தெரிவித்தனர்.
நோய்ப் பரவல் சூழலில் மக்கள் இணையத்தளங்களில் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்த நிலையில் அதற்கான விநியோகச் சேவையைச் சிறப்பாக ஆற்றியது முக்கியமான பங்களிப்பு என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
"இங்கு உள்ள சிலர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களாக இருப்பீர்கள். குடும்பத்தைப் பிரிந்து தொடர்ந்து இந்நாட்டுக்காகப் பணியாற்றும் உங்களின் கடமை உணர்ச்சிக்கு நன்றி. கொவிட்-19 சூழலிலும் தொடர்ந்து ஆதரவு தந்த உங்களுக்கு அரசாங்கம் சார்பாகவும் சிங்கப்பூர் மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்," என்றார் அவர்.
இக்கட்டான சூழ்நிலையிலும் தொடர்ந்து சேவையைச் சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல் புதிய புத்தாக்கத் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதைச் சுட்டிய மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், அனைத்து ஊழியர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் நன்றி தெரிவித்தார்.
நோன்பு வைத்துக்கொண்டே சிறப்பாகச் சேவையாற்றிவரும் இஸ்லாமிய ஊழியர்களுக்கு நன்றி நல்கினார் சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பால் கோட்ஸ்.
நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
ஓராண்டுக்கு மேலாக இன்னும் தங்களின் குடும்பங்களைப் பார்க்க இயலாத வருத்தத்தையும் கூடிய விரைவில் அவர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலிருந்து வந்து இந்நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றும் திரு முகம்மது நௌஷாத் அலாம், 33, 2019ஆம் ஆண்டுதான் குடும்பத்தைக் கடைசியாகப் பார்த்ததாகக் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் அவரது தாயார் காலமானார் என்றும் அப்போது நோய்ப் பரவல் சூழலால் விமானச் சேவைகளில் தடை ஏற்பட்டதாகவும் அதனால் அப்போதுகூட தாய்நாட்டிற்குச் செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார். கில்லினி அஞ்சல் நிலையத்தின் உதவி கிளை மேலாளரான அவர், வாடிக்கையாளர்களுடன் உரையாடி, அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இந்த புனித ரமலான் மாதத்தில் காலமான தனது தாயாருக்காக அதிகமான பிரார்த்தனைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

