தீவிரவாதச் சிந்தனையுடன் செயல்பட்ட 34 வயது மலேசிய ஆடவருக்கு, உயர் நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்த முகம்மது ஃபிர்டாவோஸ் கமால் இன்ட்ஸாம் மீது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான பொருட்களை வைத்திருந்தது தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆடவர் வைத்திருந்த பொருட்களில் இரண்டு 'மெமரி கார்டு'கள், நாட்டுக் கொடி ஒன்று, நான்கு புத்தகங்கள், ஒரு கைபேசி ஆகியவை அடங்கும்.
ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தின் சுங்கச்சாவடிகள், குடிநுழைவு, தடைக்காப்பு வளாகத்து வருகையாளர் பகுதியில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று காலை 10.40 மணியளவில் ஆடவர் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒப்புக்கொண்டார்.
வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் முன்னிலையான ஃபிர்டாவோஸ், சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஆடவர் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபட தம்முடைய சிங்கப்பூர் மனைவியுடன் சிரியா செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.
ஆடவரின் 34 வயது மனைவி, ஒரு சமயக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர் என்றும் கணவரின் தீவிரவாதச் சிந்தனையால் அவரும் தூண்டப்பட்டு கணவருடன் சிரியாவுக்குச் செல்லத் தயாராக இருந்தார் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே மனைவிக்கு ஈராண்டு கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சமயக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டதற்கான அறிகுறி ஏதும் ஃபிர்டாவோசிடம் காணப்படவில்லை என்று சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
2016ஆம் ஆண்டிலிருந்து ஃபிர்டாவோசுக்குத் தீவிரவாதச் சிந்தனைகள் ஏற்படத் தொடங்கியதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. தீவிரவாத சித்தாந்தத்தைப் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள அவர் இணையத்தைப் பயன்படுத்தியதாகவும் அதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஐஎஸ்ஐஎஸ்க்குத் தொடர்பான கருத்துகளால் தொடர்ந்து ஈர்க்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு முற்பாதிக்குள் இஸ்லாமிய சமயத்துக்காக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சண்டையிடுவதாக ஃபிர்டாவோஸ் நம்பிவிட்டார். இஸ்லாமிய ஆட்சி உருவாக வன்முறையை நாடுவதில் தவறில்லை என்ற தவறான புரிதலும் அவருக்கு ஏற்பட்டது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போரில் தோற்றபோதிலும் அவர் தொடர்ந்து அதை ஆதரித்து வந்தார்.
தமது சமூக ஊடகப் பக்கங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்துகளையும் அவர் அடிக்கடி பதிவிட்டு வந்தார்.

