துணைப் பிரதமர் ஹெங், அமைச்சர் எட்வின் டோங் வலியுறுத்து
இளையர்கள் தொண்டூழியத்தில் ஈடுபடுவதும் சமூகக் குழுக்களுக்கு இடையில் பிணைப்புகளை ஏற்படுத்துவதும் சிங்கப்பூர் சமூகத்துக்கு உயிர்நாடியானவை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங்கும் வலியுறுத்திக் கூறினர்.
'ஹார்ட்வேர் நெட்வொர்க்' என்ற இளையர் தொண்டூழிய அறப்பணி அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் மற்றும் உடன்பாட்டு கையெழுத்து நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
இளையர்கள் தொண்டூழியத்தில் ஈடுபடவும் சமூகத்திற்குத் தொண்டாற்றவும் மேலும் பல வாய்ப்புகளை வழங்குவதற்குத் தோதாக எஸ்ஜி கேர்ஸ், தெமாசெக் அறநிறுவனம் ஆகியவற்றுடன் இரண்டு உடன்பாடுகளில் இந்த அறப்பணி கட்டமைப்பு நேற்று கையெழுத்திட்டது.
கட்டமைப்பின் தலைமைப் புரவலராக இருக்கும் திரு ஹெங், "ஒவ்வொருவரும் ஒரு சிறு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் மேலும் பலவற்றைச் சாதிக்க நம்மால் முடியும்," என்றார்.
அதேபோல நம் அக்கறைக்குரிய அம்சங்களில் கவனத்தை இப்போது நாம் திருப்ப முடியும் என்று தெரிவித்த அமைச்சர் திரு டோங், இந்த முயற்சியில் தொண்டூழியம் மூலாதாரமானது என்று தான் நம்புவதாகக் கூறினார்.
"இளையர்கள் வேலை தேடும்போது தேவைப்படக்கூடிய உயிர்நாடியான தேர்ச்சிகளைப் பெறுவதற்குத் தொண்டூழியம் உதவுகிறது. அதேவேளையில், சமூக குழுக்களுக்கு இடையில் இணைப்புப் பாலத்தையும் தொண்டூழியம் அமைக்கிறது," என்றார் திரு டோங்.
கொவிட்-19 பாதிப்புகள், ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க சிறந்த முறையில் சிங்கப்பூர் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று இருவரும் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்தக் கட்டமைப்பு 320 இளையர்களை உள்ளடக்கி நடத்திய ஓர் ஆய்வு, 85 விழுக்காட்டு இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
கல்வி, பயிற்சி, சமூகம், சமூக ஆதரவு, எதிர்கால வேலை வாய்ப்புகள் ஆகியவை தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் என்று அந்த இளைஞர்கள் தெரிவித்ததாகவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

