சிங்கப்பூர்-மலேசியா எல்லை கடந்த 13 மாத காலமாக மூடியே இருக்கிறது. இதனால் குடும்பங்கள் பெரும் சங்கடங்களுக்கு, மன உளைச்சலுக்கு, பிரச்சினைகளுக்கு ஆளாகிவிட்டன.
ஆகையால் எல்லையைத் திறக்க தேவையானவற்றைச் செய்ய மலேசிய அரசாங்கம் மேலும் முயல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சென்ற ஆண்டு மார்ச் 18 முதல் எல்லை மூடியே இருப்பதால், அன்பர்களைப் பார்க்க முடியாத அவல நிலை ஒருபக்கம் இருக்க, குடும்பங்களில் மனச்சோர்வும் பிரச்சினைகளும் அதிகமாகி இருப்பதாக மலேசியா- சிங்கப்பூர் ஊழியர் சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன் தெரிவித்தார்.
குடும்பத்தில் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சட்ட உதவி கேட்டு பலரும் தன்னுடன் தொடர்புகொண்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் காரணமாக பல குடும்பங்கள் உடைந்துபோய்விட்டதாகவும் திரு தயாளன் தெரிவித்தார். இதேபோன்ற சம்பவம் காரணமாக அண்மையில் ஒரு மாது தன் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்களில் பலரும் அதிக செலவு காரணமாக மலேசியாவில் உள்ள தங்கள் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப இயலாத நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஓர் ஊழியர் தனிமையில் இருப்பதற்கான $2,100 தொகையைச் செலவிட்டு அவரைக் கொஞ்ச நாட்களுக்கு விடுப்பில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க முதலாளிகள் முன்வருவதில்லை. காரணம் அப்படி மலேசியா செல்லும் ஊழியர்கள் திரும்பி வராமல் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று முதலாளிகள் தயங்குகிறார்கள் என்று திரு தயாளன் விளக்கினார்.
இதனிடையே, மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் அடுத்த மாதம் சிங்கப்பூர் பிரதமரைச் சந்திக்கும்போது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றி ஆராய வேண்டும் என்று மலேசியா வின் பாசிர் கூடாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் கரீம் கருத்துரைத்தார்.
தன் தொகுதிவாசி ஒருவர் சிங்கப்பூரில் மருத்துவத் துறையில் துப்புரவாளராக வேலை பார்ப்பதாகவும் மலேசியாவிற்குத் திரும்பி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் கணவருக்கு உதவக்கூட இயலாத நிலை தனக்கு ஏற்பட்டுவிட்டதை நினைத்து அவர் மனம் உடைந்து போய்விட்டதாகவும் அந்த உறுப்பினர் கூறினார்.
அந்த மாது சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மலேசியா திரும்பினால் தனக்கு வேலை போய்விடும் என்று அவர் அஞ்சு கிறார்.
சிங்கப்பூரில் கீழே விழுந்து தன் கையில் காயம் அடைந்துவிட்ட அந்த மாது தன் நிலையை நினைத்து கவலையுடன் தனியாக நாட்களைக் கடத்துவதாகவும் பாசிர் கூடாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மலேசியர்கள் தனிமைக் கட்டுப்பாடு இன்றி மலேசியா திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

