நேற்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் விளைவாக நாட்டின் மேற்கு, மத்திய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
குவீன்ஸ்டவுன், புக்கிட் தீமா, உலு பாண்டான் ஆகிய வட்டாரங்களில் நீர் நிரம்பிய கால்வாய்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் ஆகியவற்றைக் காட்டும் காணொளிகளையும் படங்களையும் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.
சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் நீரின் அளவு 90 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் திடீரென்று வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று நண்பகலிலிருந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
சிங்கப்பூரில் உள்ள 30 வட்டாரங்களைத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்குக் கழகம் அறிவுறுத்தியது.
டக்ஸ்டன் சாலை, காமன்வெல்த் லேன், டன்னர்ன், சாலை, புக்கிட் தீமா கால்வாய், பாசிர் பாஞ்சாங், ஜூரோங் டவுன் ஹால் ஆகிய வட்டாரங்கள் இவற்றில் அடங்கும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரில் கனமழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை சேவை முன்னுரைத்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களின் முற்பகுதியில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலைக்கு முன்பும் காலை நேரத்திலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களின் பிற்பகுதியில் காற்றின் பலம் குறையும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
ஆனால் இடியுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் நேரங்களில் அடிக்கடி மின்னல் ஏற்படும் என்றும் தெரிவிப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இம்மாதம் சிங்கப்பூரின் பெரும்பாலான
பகுதிகளில் மழையின் அளவு சராசரிக்கும் மேல் இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

