ஒரே ஆண்டில் தொலைத்தொடர்பு மருத்துவ சேவைகளை நாடும் வழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், இனி பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றாகிவிட்டது.
தொலைத்தொடர்பு முறையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் பயன்பாடு, கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகும் நீடிக்கிறது.
நாள்பட்ட நோய்கள், அறுவை சிகிச்சைக்குப் பிந்திய ஆலோசனைகள், நீண்டகால மற்றும் வலியைக் குறைப்பதற்கான பராமரிப்பு போன்ற சேவைகளை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொது சகாதாரப் பராமரிப்புக் கழகங்களும் வழங்கும் போக்கு அதிகரித்துள்ளது.
காணொளி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்ற வழக்கமும் சென்ற ஆண்டிறுதியில் அதிகரித்ததாக ஒருங்கிணைந்த சுகாதார தகவல் செயல்முறைகளின் தரவுகள் தெரிவித்துள்ளன.
தொலைத்தொடர்பு மருத்துவம் என்பது புதிதான ஓர் அம்சம் அல்ல. இதற்கான முன்னோட்டத் திட்டம் பத்தாண்டுக்கு முன்பே தொடங்கியது. 2017ஆம் ஆண்டில் காணொளி வழி மருத்துவ ஆலோசனை பெறுவது, ஆறு பொது சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களில் முன்னோட்டம் கண்டது.
ஆனால் பொது சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களைச் சேர்ந்த சுமார் 1,947 நோயாளிகள் மட்டுமே, 2017க்கும் சென்ற ஆண்டின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு மருத்துவச் சேவைகளை நாடினர்.
அதையடுத்து, கொள்ளைநோய் சூழலால் இவ்வாண்டு ஜனவரியில் அந்த எண்ணிக்கை 36,000ஐ எட்டிவிட்டது.
பொது மருத்துவமனைகள், பல்வேறு பலதுறை மருந்தகங்கள், பொது மருத்துவ நிலையங்கள், சமூகச் சேவை அமைப்புகள் ஆகிய 14 இடங்கள் அடங்கிய 125 பொது சுகாதார பராமரிப்புக் கழகங்கள், 7,500க்கும் மேற்பட்ட காணொளி மருத்துவ ஆலோசனை அமர்வுகளை நடத்தியுள்ளன.
மருத்துவமனைகளிலும் சிறப்பு வெளிநோயாளி மருந்தகங்களிலும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு மருத்துவ சேவை கைகொடுக்கும். மேலும் நோயாளிகள் தங்களின் பயண நேரத்தையும் மருத்துவரைக் காண்பதற்காக முன்பதிவு செய்து காத்திருக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்திடலாம்.
இந்நிலையில், தொலைத்தொடர்பு மருத்துவச் சேவை வழங்குநர்களின் பட்டியலில் தற்போது 600க்கும் மேற்பட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க ஒப்புதல் அளித்துள்ள இந்த வழங்குநர்கள், தொண்டூழியம் அடிப்படையில் பட்டியலில் சேர்ந்துள்ளனர். அத்துடன் அமைச்சின் தொலைத்தொடர்பு மருத்துவம் தொடர்பான மின்பயிற்சியையும் வழங்குநர்கள் முடித்திருக்க வேண்டும்.
நேரடி மருத்துவ சேவையை நாடும் முறை, பலராலும் விரும்பப்பட்டாலும் தொலைத்தொடர்பு மருத்துவ சேவை பெறும் வழக்கத்தை மேலும் பலர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர் அல்லது மருந்தகத்தில் காத்திருக்க பொறுமையில்லா கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு இத்தகைய தொலைத்தொடர்பு மருத்துவச் சேவை நிச்சயம் உதவியாக இருக்கும் என்றார் ஒரு மருத்துவ நிபுணர்.
இந்நிலையில், மூத்த நோயாளிகளுக்குக் கூடுதல் மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் தொலைத்தொடர்பு முறை விரும்பப்படும் ஓர் அம்சமாக தற்போது இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

