சமூகத்தில் ஒருவர் உட்பட
23 பேருக்குக் கிருமித்தொற்று
புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் சமூகத்தில் உள்ளவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய 22 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். இதற்கிடையே, நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்ட நான்கு சமூகத் தொற்று சம்பவங்களில் நீ சூன் முகாமில் உள்ளிருப்புப் பயிற்சிக்குச் செல்லவிருந்த தேசிய சேவையாளர் ஒருவரும் அடங்குவார். இந்தியாவிலிருந்து வந்த மூத்த என்யுஎஸ் இணை ஆய்வாளருக்குக் கிருமி தொற்றியது வியாழக்கிழமையன்று உறுதியானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த வேலை நண்பரான 31 வயது சுவிஸ் நாட்டு மாது ஒருவருக்கும் ஆய்வாளரின் 35 வயது சகோதரருக்கும் கிருமித்தொற்று இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. சனிக்கிழமையன்று பதிவான நான்காவது கிருமித்தொற்று நோயாளி, 41 வயதுடைய சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார்.
பிரிட்டன், ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பங்கள் குறைந்தன
பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் சிங்கப்பூர் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. அதிகாரத்துவ பிரிட்டிஷ் அரசாங்க இணையத்தளத்தின் படி, பிரிட்டன் செல்ல விரும்பிய சிங்கப்பூரர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் 2019ல் 2,535ஆக இருந்து சென்ற ஆண்டு 1,421 எனக் குறைந்தது. ஆஸ்திரேலியாவுக்குச் சென்று படிக்க விரும்பியதாக சமர்ப்பிக்கப்பட்ட மாணவர் விசா விண்ணப்பங்கள், 2019ல் 1,315ஆக இருந்து சென்ற ஆண்டு 59% குறைந்து, 530 ஆனது.

