ஆர்த்தி சிவராஜன்
இளையர்கள் மத்தியில் தமிழ் மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்தது 'முத்துச்சிதறல் 2' நிகழ்ச்சி. இரண்டாவது ஆண்டாக உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், சென்ற வெள்ளிக்கிழமையன்று இணையம் வாயிலாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
'இல்லங்களில் தமிழ்ப் புழக்கம்' என்ற கருப்பொருளைக் கொண்ட நிகழ்ச்சியில், தேசியக் கல்விக் கழக ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் துணைத் தலைவராகவும் தமிழ்ப் பகுதிக்குப் பொறுப்பு வகிப்பவருமான முனைவர் சீதாலட்சுமி, பிரபல பேச்சாளரும் பெற்றோருக்கான பயிற்றுவிப்பாளருமான திருமதி சரோஜினி பத்மநாதன், அரசாங்க அதிகாரி குமாரி அத்தினா மைக்கல் ஆகியோர் உரையாற்றினர்.
தமிழ் மொழியை இளையர்களிடையே ஊக்குவிக்கும் முறைகளைப் பற்றி முனைவர் சீதாலட்சுமி பேசினார். இல்லங்களில் தமிழ் மொழிப் புழக்கம் குறித்த கணக்கெடுப்புகளையும் தமிழ்க்கல்வி குறித்த மறுஆய்வுகளையும் மக்களின் எண்ணங்களையும் பகிர்ந்ததோடு தமிழ் மொழியை இளையர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்தார்.
தமிழ் மொழிப் புழக்கத்தை இளையர்களிடையே மேம்படுத்த நாம் என்ன செய்யலாம் என்பது குறித்து திருமதி சரோஜினி பகிர்ந்துகொண்டார். வீடு, பள்ளிப் பருவம், சமூகம், தலைவர்கள், உலகளாவிய தொழில் துறைகள், நாடு, எதிர்காலம் போன்ற முக்கிய அம்சங்கள் இளைஞர்களின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி பேசினார்.
சிங்கப்பூர் இளையர்கள் தமிழ் மொழியில் பேசுவதில் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து குமாரி அத்தினா பேசினார். இளையர்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் தமிழ்ப் புழக்கம் ஏன் குறைகிறது என்ற வெவ்வேறு காரணங்களை விளக்கினார். தமிழில் பேசும் ஒருவரை ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறியதுடன், அவ்வாறு பேசும்போது ஆங்கிலத்தையும் கலந்து பேசினால் அவர்களைக் கேலி செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் மொழியில் பேசுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் காணொளி காட்சிகள் மூலம் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் பெரும்பாலோர் தமிழ் மொழியை விட ஆங்கில மொழியின் எளிமையே முக்கிய காரணமாகக் கூறினர். அதே நேரத்தில், மற்ற சில மாணவர்கள் தமிழ் மொழியில் பேசுவது தங்களுக்குச் சிரமம் இல்லை என்றும் கூறினார்கள். சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியைக் கற்றதாலும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நாள்தோறும் பேசுவதாலும் எளிமையாக தமிழில் பேச முடிகிறது என்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு சு மனோகரன், "2006ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தமிழ் பேசாத சிங்கப்பூர் குடும்பங்கள் 60% என்று தெரியவந்தது. எதிர்காலத்தில் தமிழ் மொழி சிங்கப்பூரில் இருக்குமா என்ற பயத்தை அது ஏற்படுத்தியது. அத்தகைய ஒரு சூழ்நிலையைத் தவிர்க்கவே தமிழ் மொழி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வளர்தமிழ் இயக்கம் நடத்தி வருகிறது. முக்கியமாக, தமிழ் மொழி வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்றார்.
உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் திரு பொன் சுந்தரராசு, வாய்ப்பளித்த வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

