குடும்பத்தில் உள்ள பிள்ளைகளும் கொவிட்-19 காலகட்டத்தில் வீட்டு வேலை செய்வதில் கூடுதல் பங்காற்றத் தொடங்கி உள்ளனர்.
வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலைக்கு அனைவரையும் கொவிட்-19 கிருமிச் சூழல் சென்ற ஆண்டு தள்ளியபோது, குடும்பமாக கூடுதல் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு அமைந்தது.
ஆனால் விளையாட்டுப் பொருட்கள், கணினி மற்றும் தொலைக்காட்சித் திரைகள், வீட்டிலிருந்தவாறு கற்றல் ஆகியவற்றையும் தாண்டி பிள்ளைகளைப் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனால், பெற்றோர் சிலர் தங்களின் பிள்ளைகளை வீட்டு வேலை செய்வதில் ஈடுபடுத் தினர்.
சிறு வயதிலேயே இவ்வாறு வீட்டு வேலை தொடர்பில் பங்காற்ற வைப்பது, சிறந்த பண்புநலன்களையும் வாழ்க்கைத் திறன்களையும் பிள்ளைகளிடத்தில் வளர்ப்பதுடன் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் அது உயர்த்தும் எனப் பெற்றோர்களும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.
"தனக்குத் தரப்பட்ட ஒரு வீட்டு வேலையை முடிக்கும்போது சாதித்துவிட்டோம் என்ற உணர்வைப் பிள்ளைகள் பெறுவதுடன் அவர்களுக்குள்ள தன்னம்பிக்கையும் கூடும்," என்றார் சமூகச் சேவைத் துறை நிபுணர் ஒருவர்.
வேலையைச் சிறப்பாக செய்து முடித்ததாக பெற்றோர் பிள்ளையைப் பாராட்டும்போது, மீண்டும் உதவ வேண்டும் என்ற உந்துதலும் அப்பிள்ளைக்கு ஏற்படும் எனக் கூறப்பட்டது.
தங்களின் உதவியைப் பிறர் மதிக்கிறார்கள் என்ற உணர்வு பிள்ளைகளுக்கு ஏற்படும்போது அவர்கள் ஒத்துழைப்பு வழங்கும் சாத்தியமும் அதிகரிக்கும் என்றார் வேறொரு நிபுணர்.
குடும்பமாகச் சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்யும்போது, அதன் பலன் பன்மடங்காகும் என்றார் அவர்.
வீட்டு வேலை செய்வதை
ஊக்குவிக்கும் வழிகள்
இருப்பினும் ஒரு சில பிள்ளைகளுக்கு வீட்டு வேலை செய்வதில் ஈடுபாடு இருக்காது.
அந்நிலையில் வாழ்க்கைத் திறன்கள், குழு உணர்வு ஆகியவற்றை வீட்டு வேலை செய்வதால் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொண்டு, பெற்றோர்கள் வீட்டு வேலை செய்வதன் முக்கியத்துவத்தை பிள்ளைகளிடத்தில் வலியுறுத்த வேண்டும்.
பெற்றோரைத் தவிர தாத்தா, பாட்டி, இல்லப் பணியாளர்கள் ஆகியோரும் வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் செய்வது குறித்து ஆதரவு நல்க வேண்டும்.
கடினமான வேலைகளைத் தராமல், பிள்ளைகள் செய்யக்கூடிய வேலைகளைப் பெற்றோர்கள் படிப்படியாக தர வேண்டும்.
வயதுக்கு ஏற்ற வேலைகளையும் தேர்ந்தெடுத்துத் தருவது முக்கியம். தங்களின் விளையாட்டுப் பொருட்களை எடுத்து வைக்க, குழந்தைகள் கூட கைகொடுக்கலாம்.
'சிறப்பாக செய்தாய்' என்று பொதுவான ஒரு பாராட்டைத் தெரிவிக்காமல், அந்த வேலை எவ்வாறு சிறப்பாக செய்யப்பட்டது என்பதைப் பெற்றோர் குறிப்பிட்டுப் பேசலாம்.
இதற்கிடையே, ஆண் பெண் இரு சாராரும் எந்த ஒரு வீட்டு வேலையையும் செய்யலாம் என்ற சமத்துவ உணர்வையும் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.

