கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், கை வலி, காய்ச்சல், அசதி எனத் தங்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் பற்றி பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இந்தப் பக்கவிளைவுகளால் சற்று அசௌகரியம் ஏற்பட்டாலும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டையே அவை குறிப்பதாக கூறப்படுகிறது.
தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இளையர்கள் சிலருக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள், முதியோரைக் காட்டிலும் மோசமாக இருந்த நிலையும் உண்டு.
'ஃபைசர்', 'மொடர்னா' தடுப்பூசிகள் தொடர்பிலான மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளை இவை பிரதிபலிப்பதாக இரு சாராரின் அனுபவங்களும் அமைந்துள்ளன.
இதன்படி, 18 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், தங்களுக்குக் காய்ச்சல், அசதி, தலைவலி, ஊசி குத்திய இடத்தில் நோவு போன்ற பக்கவிளைவுகளை, 56 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் ஏற்பட்டதை விட பலமுறை அனுபவித்ததாக 'ஃபைசர்' தடுப்பூசி தொடர்பான பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
'மொடர்னா' தடுப்பூசி தொடர்பிலும் அதே போக்கு தென்பட்டது. 18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு ஏற்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
மேலும், இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு பக்கவிளைவுகள் அதிகரித்ததாக இரு வகை தடுப்பூசி தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன.
இந்நிலையில், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்கள், தடுப்பூசியின் பக்கவிளைவுகளை மேலும் நன்கு உணர்வார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இளையர்கள் மற்றும் பெண்கள் பக்கவிளைவுகளை அதிகமாக உணரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பக்கவிளைவுகளை உணராமல் இருந்தால் தடுப்பூசியின் ஆற்றல் குறைவு என்றாகிவிடாது என்றார் ஒரு நிபுணர். அனைவருக்கும் தடுப்பூசி வழி கிடைக்கும் பாதுகாப்பு சமம்தான் என்று குறிப்பிடப்பட்டது.
"நமது நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது என்பதற்கு ஒரு நல்ல அறிகுறியாக இந்த காய்ச்சல், வலி போன்ற பக்கவிளைவுகளைக் கருத வேண்டும்," என்றார் தொற்று நோய் நிபுணர் ஒருவர்.
இருப்பினும், முதியவர்களிடையே தடுப்பூசியின் ஆற்றல் குறித்து ஆழமான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சுட்டினார்.
வயது காரணமாக முதியவர்களுக்குப் போடப்படும் தடுப்பூசி, சற்று ஆற்றல் குறைந்ததாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும், வயதானவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது.
"நோயை எதிர்க்கும் ஆற்றலும் முதிர்ச்சி அடையும் நிலையில், முதியோருக்கு நோய்க்கான கடுமையான அறிகுறிகள் ஏற்படும் சாத்தியம் அதிகம். இதனால் தொற்றுக்கு ஆளாகித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்படலாம், அல்லது அவர் உயிரிழக்கவும் நேரிடலாம்," என்றார் அவர்.
இதற்கிடையே, முதியவர்களுக்கு உள்ள வேறு மருத்துவப் பிரச்சினைகள் காரணமாகவும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அவர்களது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பாதிக்கப்படலாம் என்றார் ஒரு நிபுணர்.

