ஆயர் ராஜா விரைவுச்சாலை, வெஸ்ட் கோஸ்ட் ஹைவே, புக்கிட் தீமா மற்றும் தானா மேரா கோஸ்ட் ரோடு ஆகிய இடங்களில் போக்கு வரத்து போலிசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில் இரு தினங்களில் 34 சைக்கிளோட்டிகள் சாலைகளில் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"பெரும்பாலான சைக்கிளோட்டிகள் விதிமுறைகளைப் பின்பற்றினர். 16 சைக்கிளோட்டிகள் தலைக்கவசம் இன்றி சாலைகளில் சென்றனர்," என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் குறிப்பிட்டது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தபோது அதனைப் பொருட்படுத்தாது சென்ற 16 சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர். சாலையில் மற்ற வாகனங்கள் சென்றதற்கு எதிர்த்திசையில் சைக்கிளோட்டியதாக இருவர் சிக்கினர்.
பலர் சைக்கிளோட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட நிலப் போக்குவரத்து ஆணையம், சாலைகளில் பாதுகாப்பை மனதில் இருத்த வேண்டும் என்றது. விதிமுறைகளை மதித்து சைக்கிள் ஓட்டி, மற்றவர்களின் மீது அக்கறையுடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும்படி சைக்கிளோட்டிகளை ஆணையம் கேட்டுக்கொண்டது.
சாலை விதிமுறைகளை மீறி ஒரு குழு சைக்கிளோட்டிச் செல்வதைக் காட்டும் காணொளியை அண்மையில் உள்ளூர் நடிகர் டே பிங் ஹுய் பகிர்ந்ததுடன், இதுபோன்ற பல பிரச்சினைகளைத் தாம் ஏதிர்கொண்டதாகக் குறிப்பிட்டு, அனைத்து சைக்கிள்களையும் பதிவு செய்யும் முறையைக் கொண்டுவரவும் பரிந்துரைத்தார்.
மேலும் பலர் சைக்கிளோட்டி
களுக்குக் கடுமையான விதிமுறைகள் தேவை எனக் குரல்கொடுத்
ததையடுத்து, சாலைகளில் சைக்கிளோட்டிகளுக்குத் தற்போதிருக்கும் விதிமுறைகளையும் சைக்கிளோட்டிகள் தேர்வு எழுதுவதும் அவர்களுக்கு உரிமமும் தேவையா என்பது குறித்தும் குழு ஒன்று ஆராயும் என கடந்த 12ஆம் தேதி போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்தார். பொதுமக்களிடம் கருத்து கேட்டு மறுஆய்வு செய்ய ஆக்டிவ் மொபிலிட்டி ஆலோசனைக் குழு பல மாதங்கள் எடுக்கக்கூடும் என்றார் அவர்.

