கடுமையான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போலிஸ் அதிகாரி என்ற முறையில், விசாரணை செய்யும்போது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புப்படுத்தும் விதத்தில் பேசுவதன் மூலம் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்று துணை கண்காணிப்பாளர் கெர் பூன் டாட், 34, கூறினார்.
குற்றச் செயல்களைக் கண்டுபிடிக்க, கூடிய விரைவில் தேவையான தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுடன் நல்லதொரு உறவை கட்டியமைப்பது முக்கியம் என்றார் அவர்.
பாலியல் தொடர்பிலான கடுமையான குற்றங்களின் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரிகளை வழிநடத்தும் அவர் குற்றவியல் விசாரணைத் துறையின் கடுமையான பாலியல் குற்றப் பிரிவு அதிகாரி. குறிப்பாக, சிறு பிள்ளைகளிடம் விசாரிக்கும்போது அவர்களிடமிருந்து சரியான தகவல்
களைப் பெறுவது சவாலானது என்கிறார் அவர்.
"முன்பின் தெரியாதவர்களிடம் பிள்ளைகள் அவ்வளவு எளிதில் பேசிவிடமாட்டார்கள். அதனால், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் முயற்சிகளை போலிஸ் விரிவுபடுத்தியுள்ளது. மனநலம், சமுதாயப் பணி, ஆலோசகர்கள் போன்ற பின்னணிகளைக் கொண்ட தொண்டூழியர்களுடன் இணைந்து போலிசார் செயல்படுகின்றனர்.
"போலிஸ் அதிகாரிகள், மருத்து வர்கள், குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரே விசாரணை நடத்தப்படுவதன் மூலம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவங்களைப் பற்றி பிள்ளைகள் பலமுறை நினைவுகூரவேண்டியிருக்காது.
"குற்றம் புரிந்தவர் குடும்ப உறுப்பினராக இருந்தால், சாட்சிகளின் கூற்று விசாரணைக்குத் தடையாக இருக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் கடுமையான பாலியல் குற்றம் தொடர்பான விசாரணைகள் காணொளிப் பதிவு செய்யப்படுகின்றன.

