விவேக மின்சார மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி, அவற்றை விளம்பரப்படுத்தி விநியோகம் செய்திட 'யூரோஸ்போர்ட்ஸ் டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடன் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் கீழ் இயங்கும் 'ஸ்ட்ரைய்ட்ஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன்' இணையவுள்ளது.
இரு உள்ளூர் நிறுவனங்களும் இத்திட்டம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருப்பதாக இன்று (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சிங்கப்பூரிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் வர்த்தக மின்சார மோட்டார் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக 'ஸ்ட்ரைட்ஸ்' நியமிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வகைகள், குறிப்பாக உணவு விநியோகம் மற்றும் தளவாடப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வர்த்தக பயன்பாட்டுக்கான மோட்டார் சைக்கிள்களை யூரோஸ்போர்ட்ஸ் டெக்னாலஜிஸ் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டுக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

