கடல்துறையில் கரிம வெளியீட்டைக் குறைக்க முயற்சி
கடல்துறை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆய்வு மேற்கொண்டு, கரிம வெளியீட்டைக் குறைக்கும் வகையில் சிங்கப்பூரில் புதியதோர் அனைத்துலக மையம் அமையவிருக்கிறது.
அந்த அனைத்துலக கரிமநீக்க மையம் குறித்த மேலதிக விவரங்களைக் கடல்துறை, துறைமுக ஆணையம் இவ்வாரத்தில் வெளியிடும். 2.5 ஹெக்டர் பரப்பளவிலான முன்னாள் பாசிர் பாஞ்சாங் மின்நிலையம் அல்லது 1.55 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மரினா சௌத் திடலில் அம்மையம் அமைக்கப்படலாம் என அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
வரும் வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் 15வது சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின் நேற்றைய தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசியபோது போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடல்துறை, துறைமுக ஆணையத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் கடல்துறை அறநிறுவனத்தால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'கடல்துறை கரிமநீக்க அனைத்துலக ஆலோசனைக் குழு'வின் மற்றப் பரிந்துரைகளும் இவ்வாரம் இடம்பெறும் நிகழ்ச்சிகளின்போது வெளியிடப்படும்.
கரிமநீக்கம், மின்னிலக்கமயம், திறனாளர் ஈர்ப்பு ஆகிய கருப்பொருள்களை மையப்படுத்தி நடைபெறும் இந்த ஒரு வார கருத்தரங்கில், உலகம் முழுவதுமிருந்தும் பெரும்பாலும் இணையம் வழியாக ஏறத்தாழ 6,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடியாலும் அண்மையில் சூயஸ் கால்வாயைக் கப்பல் ஒன்று அடைத்துக்கொண்டு நின்றதாலும் கடல்துறை பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், புதிய அனைத்துலக மையம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முக்கியக் கடல் வழிகளைத் திறந்து வைப்பது எவ்வளவு அவசியம் என்பதை இவ்விரு நெருக்கடிகளும் வலியுறுத்தி இருப்பதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
கப்பல்கள் மோதல், தரைதட்டுதல் போன்ற அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து கூறும் விதமாக சிங்கப்பூர் தனது செயல்முறைகளையும் அமைப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் கடற்கொள்ளைக்கு எதிரான போரைத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துலக விநியோகத் தடங்கள் மீட்சி பெற, தேச வேறுபாடின்றி கடலோடிகள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதும் முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது 'டிஜிட்டல்போர்ட்@எஸ்ஜி ஃபேஸ் 2' எனும் மின்னிலக்க முறையை அமைச்சர் ஓங் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஆதரவு, திட்டமிடல் சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு, கப்பல்கள் இங்கு நின்று செல்லும் நேரம் குறையும்.

