வரும் ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 2.7 விழுக்காடாக அதிகரிக்கலாம் என சிங்கப்பூர் குடும்பங்கள் எதிர்பார்ப்பதாக ஒரு கருத்தாய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
'சிண்டெக்ஸ்' எனப்படும் சிங்கப்பூர் பணவீக்க எதிர்பார்ப்புக் குறியீட்டெண்ணுக்காக நடத்தப்பட்ட அந்தக் காலாண்டு ஆய்வு முடிவுகளை டிபிஎஸ் வங்கியும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் கூட்டாக நேற்று வெளியிட்டன. பலதரப்புகளையும் சேர்ந்த 500 சிங்கப்பூரர்கள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அந்தக் கருத்தாய்வில் பங்கெடுத்தனர்.
2020 செப்டம்பரில் 1.9 விழுக்காடாகவும் 2020 டிசம்பரில் 2.2 விழுக்காடாகவும் பணவீக்கம் இருந்தது. தங்குமிடம், தனியார் போக்குவரத்து சார்ந்த செலவுகள் தவிர்த்த ஓராண்டு மூலாதாரப் பணவீக்கம் 2.7 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயல்புநிலை திரும்புவது போன்ற ஒரு தோற்றமும் பல்வேறு கொவிட்-19 தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால் உலகப் பொருளியல் மீட்சிக்கான அறிகுறிகள் தெரிவதும் பணவீக்க எதிர்பார்ப்பு அதிகரிப்பிற்குக் காரணங்களாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டில் மூலாதாரப் பணவீக்கம் குறைவாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நாணயக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
உணவு, போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, கேளிக்கை, ஆடை, வீட்டு உபயோகப் பொருள்கள், தொடர்பு ஆகிய பெரும்பாலான பிரிவுகளில் பணவீக்க எதிர்பார்ப்பு அதே நிலையில் நீடிக்கிறது. வீடமைப்பு மற்றும் நீர், எரிவாயு, மின்சாரம் போன்ற பயனீடுகளுக்கான பணவீக்க எதிர்பார்ப்பு சற்றே குறைந்துள்ளது. மாறாக, தனிநபர் பராமரிப்பு போன்ற பொருள், சேவைகளுக்கான அவ்விகிதம் சற்றே கூடி இருக்கிறது.
கருத்தாய்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்களில் 13.4 விழுக்காட்டினர் அடுத்த 12 மாதங்களில் ஐந்து விழுக்காட்டிற்குமேல் ஊதியக் குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். இப்படி ஊதியம் குறையக்கூடும் என கடந்த டிசம்பரில் 18.1 விழுக்காட்டினர் எதிர்பார்த்தனர்.
பணவீக்கத்தின்மீது கிருமித் தொற்று நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் பங்கேற்றோரில் 67 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

