சிங்கப்பூரில் மேலும் இருபது பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர். எஞ்சிய 19 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் அனைவருக்கும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் சமூகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் 39 வயது இந்தோனீசிய ஆடவர் என்றும் அதிகம் பரவும் திறன்கொண்ட 'பி117' வகை கிருமியால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது முதற்கட்டச் சோதனை முடிவு காட்டியது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர் கப்பலில் பணிபுரிபவர் என்றும் கொவிட்-19 பரிசோதனை, தடுப்பூசி தவிர்த்து வேறு எதற்காகவும் அவர் கப்பலைவிட்டு வெளியேறியதில்லை என்றும் சொல்லப்பட்டது.
கொரோனா தொற்றியதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. கடந்த வியாழக்கிழமை அட்டவணைப்படி செய்யப்படும் வழக்கமான பரிசோதனையின்போது அவரை கொரோனா தொற்றி இருந்தது தெரியவந்தது.
மறுநாள் அறிவிக்கப்பட்ட தொகுதி மாதிரி பரிசோதனை முடிவிலும் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பின்னர் அவர் அவசர மருத்துவ ஊர்தி மூலமாக தேசிய தொற்றுநோய்த் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்றைய நாளில் மேற்கொள்ளப்பட்ட தனிநபர் பரிசோதனையிலும் அவரை கொரோனா தொற்றி இருந்தது உறுதியானது.
கடந்த வியாழனன்று அவர் முதலாவது கொவிட்-19 தடுப்பூசியையும் போட்டுக்கொண்டார். ஆயினும், தடுப்பூசியில் கொரோனா கிருமி இல்லை என்பதால் தடுப்பூசி போட்டதன் மூலமாக அவரைக் கிருமி தொற்றியிருக்க வாய்ப்பில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டாவது தடுப்பூசி போட்டு சில வாரங்களுக்குப் பிறகே ஒருவர் கொரோனா நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவார் என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குச் சற்றுமுன் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறிது நேரத்திற்குப்பின் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு என்று அமைச்சு கூறியது.
இதைத் தொடர்ந்து, அந்த இந்தோனீசிய ஆடவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

