மனிதவள அமைச்சு அடுத்த மாதத்திலிருந்தது ஜூன் மாதம் வரை 400 வேலையிடங்களில் பாதுகாப்புச் சோதனைகளை நடத்தவிருக்கிறது.
கட்டுமானம், உற்பத்தி போன்ற அதிக ஆபத்து இருக்கும் துறையைச் சேர்ந்த வேலையிடங்களில் சோதனை நடத்தப்படும்.
இந்தப் பாதுகாப்புச் சோதனைக்கு 'ஆப்பரேஷன் ஐபிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வழக்கமாக நடத்தப்படும் சோதனைகளுடன் இந்தப் பாதுகாப்புச் சோதனையும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உற்பத்தித் துறையைச் சேர்ந்த வேலையிடங்களில் ஆறு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. 2019ஆம் ஆண்டில் நான்கு பேர் மாண்டனர்.
இதன் காரணமாக இத்துறையில் தமது அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.
மற்ற துறைகளைச் சேர்ந்த வேலையிடங்களைக் காட்டிலும் உற்பத்தித் துறையைச் சேர்ந்த வேலையிடங்களில் ஆக அதிகமானோர் காயமுற்றனர்.
110 பேருக்கு மிக மோசமான காயங்கள் ஏற்பட்டன. 2,300க்கும் மேற்பட்டோருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
காயம் அடைந்த உற்பத்தித் துறை ஊழியர்களில் 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு இயந்திரங்கள் காரணமாக காயங்கள் ஏற்பட்டன.
இந்த நிலை கவலை அளிப்பதாக திரு ஸாக்கி தெரிவித்தார்.
48 பேருக்குக் கை, கால் இழப்பு ஏற்பட்டதை அவர் சுட்டினார்.
"இந்த விகிதம் மிகவும் அதிகம். கை, கால் இழந்த ஒவ்வொருவரின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
"எனவே, உற்பத்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆராய வேண்டும்," என்று ஜூரோங்கில் உள்ள பழைய உலோகங்களை மறுசுழற்சி செய்யும் நிலையமான எசுன் இன்டர்நேஷனலில் நேற்று நடைபெற்ற வேலையிடப் பாதுகாப்புச் சோதனையைப் பார்வையிட சென்ற திரு ஸாக்கி கூறினார்.
போக்குவரத்து நிர்வாகம், இயந்திரப் பராமரிப்பு போன்றவற்றில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்துக்கு வேலை நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சோதனை குறித்து அந்த நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்க நிறவனங்களை ஊக்குவிப்பது குறித்து அமைச்சு ஆராய்வதாக திரு ஸாக்கி கூறினார்.

