ரமலான் நோன்பு காலத்திற்கான இலவச உணவுத் திட்டம் மின்னிலக்கமயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
திட்டத்தின்கீழ் உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு இலவச பிரியாணி வழங்கப்படும். முந்திய ஆண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இலவச பிரியாணி விநியோகிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கானோரை ஈர்த்தது.
ஆனால் தற்போதைய கொவிட்-19 சூழலின் காரணமாக, ஒரே இடத்தில் பலர் கூடுவது கிருமிப் பரவல் அபாயத்தை ஏற்
படுத்தக்கூடும்.
எனவே, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமாக இத்திட்டம் மின்னிலக்கமயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலவச உணவைப் பெற குடியிருப்பாளர்கள் இணையம் மூலம் பதிவு செய்யலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஏற்புடைய நாளில் இலவச உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
Ramadan Belanja-A-Meal@Woodlands என்ற இந்தப் புதிய மின்னிலக்கத் திட்டத்தை உட்லண்ட்ஸ் மலாய் நற்பணிச் செயற் குழுவும் உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின்கீழ் செயல்படும் உட்லண்ட்ஸ் மின்னிலக்க அலுவலகமும் அறிமுகப்படுத்தியுள்ளன.
வாரத்துக்கு ஓர் இலவச
உணவை குறிப்பிட்ட சில உணவு அங்காடிக் கடைகளிலிருந்தோ அல்லது காப்பிக் கடைகளில் உள்ள உணவுக் கடைகளிலிருந்தோ குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய அணுகுமுறை கடந்த வாரம் தொடங்கியது. இது நோன்பு காலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும்.
குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
திட்டத்தில் பதிவு செய்துகொள்பவர்களின் கைபேசி
களுக்கு கியூஆர் குறியீடு உள்ள மின் அட்டை அனுப்பிவைக்கப்படும். இந்த மின் அட்டையை உணவுக் கடைக்காரர்களிடம் காட்டி இலவச உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
திறன்பேசி வைத்திருக்காதவர்கள் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்கான அட்டைகளை உட்லண்ட்ஸ் சமூக மன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் 1,000 இலவச உணவுப் பொருட்கள் வரை விநியோகிக்கப்படும்.
இந்தப் புதிய திட்டத்தை நேற்று முன்தினம் கம்போங் அட்மிரல்ட்டி உணவு அங்காடி நிலையத்தில் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜஃபார் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் உணவுக் கடைக்காரர்களுக்குக் கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைக்கும் என்றார் அவர்.

