உணவு வாங்க தம்மிடம் பணம் கொடுத்த முதிய துப்புரவாளரை மானபங்கம் செய்த 46 வயது ஆடவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 68 வயது மூதாட்டியை மானபங்கம் செய்ததை சுவா வீ மெங் ஒப்புக்கொண்டார்.
சுவாவுக்கு எதிராக தீர்ப்பளித்தபோது மேலும் ஒரு மானபங்க குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் மின்தூக்கிக்காக அந்த மூதாட்டி காத்துக்கொண்டிருந்தபோது அவரை சுவா அணுகி உணவு வாங்க $4 கேட்டார்.
கேட்ட பணத்தை அந்த மூதாட்டி அவரிடம் தந்தவுடன் அவரை சுவா மானபங்கம் செய்தார். அதுமட்டுமல்லாது மூதாட்டியிடம் சுவா கூடுதல் பணம் கேட்டார். அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி கூடுதல் பணம் தர மறுத்துவிட்டார்.
அதையடுத்து அவர் மின்தூக்கிக்குள் நுழைந்து தமது வீட்டிற்குச் சென்றார்.
நடந்ததைப் பற்றி தமது மகளிடம் அவர் கூறினார். மானபங்கம் தொடர்பாக போலிசில் புகார் செய்யப்பட்டது. தம்மிடம் பரிவு காட்டியவருக்கு சுவா தீங்கு விளைவித்ததாக மாவட்ட நீதிபதி வோங் லீ தெய்ன் கூறினார். சுவாவின் செயல் அந்த மூதாட்டியை வெகுவாகப் பாதித்ததாக அவர் தெரிவித்தார்.
சுவா, கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். அவரது தண்டனைக் காலம் அன்றிலிருந்து தொடங்குவதாக
எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த மானபங்க குற்றத்துக்காக சுவாவுக்கு இரண்டு
ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட்டிருக்கலாம்.

