இருதரப்பு பயண ஏற்பாட்டு நடைமுறையை முன்மொழியும் ஜோகூர்

இருதரப்பு பயண ஏற்பாட்டு நடைமுறையை முன்மொழியும் ஜோகூர்

2 mins read
0dcb45d6-3008-412b-b267-836286843fe3
கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் உடனான இரு எல்லைகளையும் மீண்டும் திறக்க ஜோகூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த முயற்சிகளில் ஒரு பகுதியாக, சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்காக இருதரப்பு பயண ஏற்பாடுகளைத் தொடங்க எதிர்வரும் ஜூன் மாதம் புதிய தரநிலை செயல்பாட்டு நடைமுறையை முன்மொழிந்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒருபுறமிருக்க, வேலைக்காக சிங்கப்பூருக்குச் எல்லும் 100,000 ஊழியர்கள், வேலையிடத்திற்குச் செல்வதற்கும் அங்கிருந்து ஜோகூர் திரும்புவதற்கும் ஒரே பயணப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது கூறியுள்ளார்.

இந்தப் பயண ஏற்பாடுகளின்படி, மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூரின் மற்ற இடங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்றார் அவர்.

"எங்களது மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறையைக் கடைப்பிடிக்க நாங்கள் விரும்புகிறோம். சிங்கப்பூருக்கு சரக்குகளைக் கொண்டுசேர்க்கும் எங்களது லாரி ஓட்டுநர்கள் அன்றாடம் குறிப்பிட்ட ஓர் இடத்திற்குச் சென்றுவிட்டு திரும்பிவிடுகின்றனர். அதேபோன்ற பயண நடைமுறையைச் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும்," என்று அவர் விவரித்தார்.

மலேசியா-சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து இரு நாட்டு பிரதமர்களும் மே 4ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஜோகூர் அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்தப் புதிய தரநிலை செயல்பாட்டு நடைமுறை சிங்கப்பூருக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக அமையும் என்று தாம் நம்புவதாக திரு ஹஸ்னி சொன்னார்.

"பிரிட்டன், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றுடன் இருதரப்பு பயண ஏற்பாடுகளைத் தொடங்குவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருகிறது," என்றும் அவர் கூறினார்.

எல்லை மூடப்பட்டிருப்பதன் காரணமாக ஜோகூரில் பல வர்த்தகங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதால் ஜோகூருக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை திரு ஹஸ்னி சுட்டினார்.

மலேசியா-சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறக்கக் கோரி ஜோகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன.