தீவு விரைவுச்சாலையில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து
தீவு விரைவுச்சாலையின் ஓரத்தில் நேற்றுக் காலை நின்றிருந்த 'டிப்பர்' லாரியுடன் வெளிநாட்டு ஊழியர்கள் 17 பேரை ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 33 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
காயமடைந்த அந்த ஊழியர் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவ்விபத்தில் காயமுற்ற மற்ற 16 ஊழியர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி அந்த லாரியின் 36 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், ஜாலான் பகார் வெளிவழிக்கு முன்பாக நிகழ்ந்த இவ்விபத்து குறித்து காலை 6.06 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
லாரியின் பின்பகுதியில் ஊழியர்கள் இருவர் சிக்கிக்கொண்டதாகவும் அவர்களைக் கருவிகளின் துணையுடன் மீட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லாரியில் சென்றவர்கள் 23 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்துக்குப் பின் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் சுயநினைவை இழந்ததாக போலிஸ் குறிப்பிட்டது.
விபத்து தொடர்பான ஒரு காணொளி ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆடவர் பலர் சாலையில் விழுந்து கிடப்பதையும் குறைந்தது இரு அவசர மருத்துவ வாகனங்களும் ஒரு தீயணைப்பு வண்டியும் அவ்விடத்தில் நின்றிருந்ததையும் அக்காணொளி காட்டுகிறது.
இவ்விபத்து காரணமாக பைனியர் ரோடு நார்த் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
விபத்துக்குள்ளான லாரியில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் அவர்கள் 'பிரைட் ஏஷியா கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
'பிரைட் ஏஷியா கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, விசாரணை நடந்துவருகிறது என்றும் வேறெதுவும் கூறுவதற்கில்லை என்றும் நிறுவனத் தரப்பு தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறியது.