சிங்கப்பூரின் வரலாற்றிலேயே ஆகப் பெரியதென கருதப்படும் $1 பில்லியனுக்கும் அதிகமான தொகை தொடர்பிலான மோசடியில் தொடர்புடைய வர்த்தகர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இங் யு ஸி, 33, எனும் ஆடவர் மீது முன்பு இரண்டு ஏமாற்று குற்றச்சாட்டுகளும் $48 மில்லியன் தொடர்பிலான வர்த்தக மோசடியில் பங்கேற்றதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.
$8 மில்லியனுக்கும் அதிகமான தொகை தொடர்பிலான மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது மேலும் 5 குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டன. இன்வி அசெட் மேனேஜ்மென்ட், என்வி குளோபல் டிரேடிங் ஆகிய நிறுவனங்களின் இயக்குநரான இங் நிக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நிதியாக முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றார்.
மூன்று மாதங்களில் சராசரியாக 15% வரை லாபம் கிடைக்கும் என முதலீட்டாளர்களிடம் உறுதி அளித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட $1 பில்லியன் தொகையில், கிட்டத்தட்ட $300 மில்லியன் இங்கின் தனிப்பட்ட கணக்குக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வர்த்தக விவகாரத் துறை அவரிடமிருந்து $100 மில்லியன் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தது. இங்கின் இரு நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம் உரிமம் வழங்கவில்லை.
தற்போது $1.5 மில்லியன் பிணையில் வெளியில் இருக்கும் அவர் மின்னணுவியல் முறையில் கண்காணிக்கப்படும் அவர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு ஏமாற்று குற்றத்துக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம். மோசடி வர்த்தகக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $15,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

