சிங்கப்பூரில் நேற்று முடிவடைந்த ஏலக்குத்தகையில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஓஇ) பெரும்பாலும் தொடர்ந்து ஏற்றம் அடைந்தன.
சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $49,640 ஆனது. இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலக்குத்தகையில் சிஓஇ $45,600 ஆக இருந்தது. கடைசியாக 2017ஆம் ஆண்டில்தான் இந்தப் பிரிவுக்கான சிஓஇ $45,600ஐத் தாண்டியிருந்தது.
பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $61,190 ஆக உயர்ந்தது. இதற்கு முந்தைய ஏலக்குத்தகையில் சிஓஇ $52,309 ஆக இருந்தது. இந்தப் பிரிவில் சிஓஇ கட்டணம் இந்த அளவு உயர்ந்து இருப்பது ஐந்து ஆண்டுகளில் இதுவே முதன்முறை.
சரக்கு வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $44,001 ஆக அதிகரித்தது. இதற்கு முந்தைய ஏலக்குத்தகையில் அது 36,134 ஆக பதிவாகியிருந்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $8,000 ஆக முடிவடைந்தது. இதற்கு முந்தைய ஏலக்குத்தகையிலும் சிஓஇ இதே அளவில்தான் இருந்தது. இந்தப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் ஏற்கெனவே உச்சத்தில் இருந்து வருகிறது.
பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $62,100 ஆக கூடியது. இதற்கு முந்தைய ஏலக்குத்தகையில் அது $52,200 ஆக இருந்தது. பொதுப் பிரிவுக்கான சிஓஇ எந்தவொரு வாகனப் பிரிவுக்காகவும் பயன்படுத்தப்படலாம் என்றாலும் அது பெரும்பாலும் பெரிய கார்களுக்குத்தான் பயன்படுகிறது.
நேற்று முடிவடைந்த ஏலக்குத்தகையில் மொத்தம் 2,957 வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.
எதிர்வரும் மே முதல் ஜூலை வரையிலான மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவிருக்கும் சிஓஇ குறைக்கப்படுவதால், கார்களுக்கான சிஓஇ கட்டணம் ஏற்றம் கண்டு வருவதாக மோட்டார் வாகன விற்பனையாளர்கள் விளக்கமளித்து உள்ளனர்.