சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையின் காரணமாக தங்ளின் சமூக மன்றத்தில் உள்ள ஓர் அறையின் மேற்கூரை மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த அறையின் மேற்கூரைக்குச் சேதம் ஏற்பட்டது.
விட்லி சாலைக்கு அருகே மேல்கம் பார்க்கில் மரம் விழுந்த சம்பவம் குறித்து அன்றிரவு 8.30 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
வேறோடு சாய்ந்து விழுந்த அந்த மரத்தின் உயரம் 24 மீட்டருக்கும் அதிகம். அதன் சுற்றளவு 4.6 மீட்டர் இருக்கும். அந்த மரம் விழுந்து இரண்டு நாள்கள் ஆன நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தேசிய பூங்காக் கழக ஊழியர்கள் அவர்களது பணியை மேற்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி தடுப்புவேலி போடப்பட்டதாக தங்ளின் சமூக மன்ற நிர்வாகக் குழுத் தலைவர் சுவா லாய் டெக் சொன்னார்.
தங்ளின் சமூக மன்றத்திலோ அல்லது அந்தக் கட்டடத்திற்கு அருகிலோ நடத்தப்படும் வகுப்புகள் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் திரு சுவா தெரிவித்தார்.
தங்ளின் சமூக மன்றத்தின் மீது அந்த மரம் விழுந்தபோது அக்கட்டடத்தின் அறைகளில் ஒன்றில் ஆசிரியர் ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் இருந்ததாக சீன நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.
ஆனால், அவ்விருவருக்கும் காயம் ஏற்படவில்லை.
சிங்கப்பூரில் மரங்கள் ஆறு முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை பொதுவாக பரிசோதிக்கப்படுவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது. மரங்களின் தன்மை, அவற்றின் வயது போன்றவற்றை பொறுத்து அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் காலகட்டம் வேறுபடும் என்றும் கழகம் விவரித்தது.
மரங்களின் அமைப்பையும் அவற்றின் சமநிலையையும் மேம்படுத்த அவற்றின் கிளைகள் சிறிது காலத்திற்கு ஒருமுறை வெட்டப்படுகின்றன.
மோசமான வானிலை காலத்தில் மரங்களைப் பரிசோதிக்கும் முறை தீவிரப்படுத்தப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் குறைக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையால் தீவின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில், திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
தீவின் மேற்குப் பகுதியில் அன்று நண்பகல் 12.25 மணிக்கும் பிற்பகல் 3.25 மணிக்கும் இடையில் ஆக அதிகமாக 161.4 மில்லிமிட்டர் அளவு மழைநீர் பதிவானது.
லோவர் டெல்டா சாலையில் கார் ஒன்றின் மீதும் அன்று மரக்கிளை விழுந்ததில் அந்த காரின் முன்பகுதியில் உள்ள கண்ணாடி நொறுங்கியது.