நீதிமன்றம்: பரபரப்பை ஏற்படுத்தும் வாசகங்களை வழக்கறிஞர்கள் தவிர்க்கவும்

நீதிமன்றம்: பரபரப்பை ஏற்படுத்தும் வாசகங்களை வழக்கறிஞர்கள் தவிர்க்கவும்

1 mins read
7c60bd8d-3717-4188-a892-8e6a553ed9ad
-

நீதிமன்ற விசாரணையின்போது தேவையில்லாமல் பரபரபூட்டும் வாசகங்களைக் கூறுவதையும் எதிர்த்தரப்பினரை அனாவசியமாக குற்றஞ்சாட்டும் தொனியைக் கடைப்பிடிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தி உள்ளது.

'ஹெராயின்' போதைப்பொருளைக் கடத்த மற்றோர் ஆடவரைத் தூண்டியதற்காக நோராஷரி கவுஸ், 46, என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தமது வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி அவர் முன்வைத்த மனுவைத் தள்ளுபடி செய்தபோது வழக்கறிஞர் ஒருவர் கூறிய வாசகங்களை நீதிமன்றம் நேற்று கவனித்தது.

நோராஷரியின் புதிய வழக்கறிஞரான திரு எம்.ரவி, இந்த வழக்கின் இறுதி வாதத்தில் கடுமையான வாசகங்களை பயன்படுத்தியதை நீதிமன்றம் சுட்டியது. நோராஷரியின் முன்னாள் தற்காப்பு வழக்கறிஞரின் திறமை, அவர் அந்த வழக்கை அணுகும் முறையைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறும் விதமாக அந்த வாசகங்கள் அமைந்ததாக நீதிமன்றம் கூறியது. நோராஷரியின் முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் "முற்றிலுமாக அடிப்படை ஆதாரமற்றவை, நியாயமற்றவை" என்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் எதிரான விமர்சனங்கள் நேர்மையற்றவை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. நோராஷரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தவறு எதுவுமில்லை எனக் கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.