ஆர்த்தி சிவராஜன்
குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் திரு வெ. மாணிக்கவாசகத்திற்கு சிங்கப்பூர் அரசு இந்திய பயணிகளுக்கு அண்மையில் அறிவித்த பயணக் கட்டுப்பாடுகள் மேலும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
தன் அம்மாவின் உடல்நலக் குறைவு காரணத்தினால் ஜனவரி 9ஆம் தேதியன்று இந்தியா சென்ற 40 வயது திரு வெ. மாணிக்கவாசகம், மார்ச் 27ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு திரும்ப முடியவில்லை. மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இவர், இரு ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்திற்கு சார்ந்திருப்போர் அட்டையை விண்ணப்பிக்க தகுதிப் பெற்றிருந்தார். எனினும், கொவிட்-19 சூழ்நிலையினால் அதை இந்நாள் வரையிலும் அவரால் பெற முடியவில்லை. மேலும், கைக்குழந்தையுடன் இச்சூழ்நிலையில் பயணம் செய்வது சாத்தியமில்லாததால், தன் மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து சிங்கப்பூரில் வசிக்கிறார்.
2013ல் திருமணம் செய்த திரு மாணிக்கவாசகம் தன் குடும்பத்தை ஓர் ஆண்டிற்குச் சில முறை
மட்டுமே சந்தித்து வருகிறார். தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவரின் குடும்பத்திற்கு ஆதரவாக அவரின் அண்ணனின் குடும்பம் உள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்கள் பிரத்தியேக இடங்களில் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றியபின், மேலும் 7 நாட்கள் தங்கள் வசிப்பிடத்தில் தனிமைப்
படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்தது. இந்த உத்தரவு இன்று இரவு 11:59 மணிக்கு நடப்புக்கு வருகிறது.
இந்தியாவில் கொவிட்-19 பரவல் மோசமடைந்துள்ளதால் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோருக்கான நுழைவு அனுமதி வழங்கப்படுவதும் குறைக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் கிருமித்தொற்று் அபாயத்தைக் குறைக்கவும் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்நடவடிக்கைகள் உதவும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் முரசிடம் பேசிய பல சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்தப் புதிய முடிவு மேலும் ஏமாற்றத்தையும் இரு நாட்டுப் பயணம் குறித்த நிலையில்லாச் சூழலையும் ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
எனினும், இந்தியாவில் கொவிட்-19 சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் இந்தக் கட்டுப்பாடுகள் தேவை
யானதுதான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
"தனிமைப்படுத்துவது நல்ல விஷயம்தான். இது நம்மையும் மற்றவர்களையும் கிருமித்தொற்றிலிருந்து பாதுக்காக்கும். வீட்டிலேயே இருந்து வெளியே செல்லாமல் இருப்பது சிரமமாக இருந்தாலும், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கு தொழில்நுட்பம் பல்வேறு வழிகளில் உதவுகிறது. இந்த சமயத்தில் பொறுமையை கடைப்பிடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது," என்று கூறினார் திரு மாணிக்கவாசகம்.
தனக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா சென்ற 40 வயது திரு மணிமாறன் அக்டோபர் வரை சிங்கப்பூருக்கு திரும்ப முடியவில்லை. எஸ் பாஸ்-ல் அனலைசர் மூத்த தொழில்நுட்ப வல்லுநராக (Analyser Senior Technician) பணிப் புரியும் இவரும் தன் மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து சிங்கப்பூரில் வசிக்கிறார். 2018-ல் அவரது மனைவியின் சார்ந்திருப்போர் அட்டை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தார் இந்தியாவில் வசித்து வருகின்றனர். அவர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் விரும்பினாலும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே சிங்கப்பூரில் தொடர்ந்து வேலை செய்வதாக கூறினார் திரு மணிமாறன்.
"இந்த 21 நாள்கள் தனிமை படுத்துவதற்கான காரணம் இந்தியாவில் கொவிட்-19 நோயால் அவதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான். சிங்கப்பூர் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். நாமும் இதை ஏற்றுக்கொண்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்," என்று கூறினார். புதிதாக அறிமுகமான இந்த உத்தரவு சில சிங்கப்பூரர்களையும் பாதித்துள்ளது. கூடுதல் 7 நாள்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவதற்கும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு போவதற்கும் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
சென்னையில் தன் கணவருடன் வசிக்கும் டிஜிபசாரின் நிறுவனரான 25 வயது சிங்கப்பூரர் ரிதுமிதா சரவணன், திருமணத்திற்கு பின் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார். 3 மாதத்திற்கு ஒரு முறை சிங்கப்பூரில் வசிக்கும் அவரின் குடும்பத்தாரை பார்க்க வரும் அவர், ஊரடங்கு தொடங்கிய முதல் அவர்களை சந்திக்க வர முடியவில்லை. தற்சமயம் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகளை தேடும் ரிதுமிதா, "இணையம் வழி வேலைகள் தேடுவதும் நேர்காணல்களில் கலந்துகொள்வதும் சாத்தியமாக இருந்தாலும், தனிமைப் படுத்தும் காலகட்டம் தற்போது 21 நாள்களுக்கு கூடியதால், புது வேலையில் சேர்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது," என்று பகிர்ந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நோன்புப் பெருநாள் காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று உறவினர்களுடன் கொண்டாடும் பழக்கம் கொண்டிருக்கும் சிங்கப்பூரர் திரு நூர் முகம்மது, 76, இவ்வாண்டும் போவதற்கான திட்டமிட்டிருந்தார். ஒரு மாத ரமலான் நோன்பில் கடைசி பத்து நாட்களில் கிளம்பலாம் என்று எண்ணி, தாமும் தமது மனைவியும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றனர்.
"இந்தப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் நான் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளேன். நாடு திரும்பும்போது 14 நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு வருவதே பெரும் கஷ்டம். இருப்பினும் வேறு வழியில்லை என்று மனதளவில் தயார்படுத்திக்கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மேலும் 7 நாட்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்றால் அது இன்னும் சிரமம்," என்றார் அவர்.
"முக்கியமாக இந்தியாவில் கொரோனா பிரச்சினை தலைவிறித்தாடும் இந்த நேரத்தில் அங்கு செல்வது சரியில்லை. ஆபத்தான விளைவாக இருக்குமோ என்ற அச்சமும் இந்த முடிவுக்குக் காரணம்," என்றார் அவர்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோர் இருவார இல்லத் தனிமை உத்தரவின் முடிவிலும் கூடுதல் ஏழு நாள்கள் இல்லத் தனிமையின் இறுதியிலும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். கட்டுமானம், கடல்துறை, செய்முறை தொழில்துறைகளைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் தங்களது தாய்நாட்டில் இருந்து வந்தபின் 21 நாள்கள் இல்லத் தனிமை உத்தரவின்கீழ் இருக்கும் நடைமுறை தொடரும்.

