ஈசூனில் இருக்கும் எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம் தொண்டூழியர்களை சேவைகளில் ஈடுபடுத்தி, வளங்களை ஒருங்கிணைத்து சமுதாய சேவை முகவைகளை இணைத்து, கூட்டு திட்டப்பணி முயற்சிகளை மேற்கொண்டு சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
ஈசூனில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பட்டு வரும் அந்த நிலையம் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சமூக வளங்களை
ஒன்றுதிரட்டி தேவைப்படுபவர்களுக்கு உதவும் 'கேம்பஸ்இம்பாக்ட்' திட்டத்தை உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர்
முகம்மது ஃபைசால் இப்ராகிம் பாராட்டினார்.
உள்ளூர் இளையர் அறக்கொடை அமைப்பான 'கேம்பஸ்இம்பாக்ட்' திட்டத்தின்கீழ் சிறுவர்களுக்குப் பாடம் கற்பித்தல், ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன.
திருவாட்டி லிலியன் சுவா, 60, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்தத் திட்டத்தின்கீழ் தொண்டூழியம் செய்து வருகிறார். "குழந்தைகள்தான் நமது சமுதாயத்தின் அடிப்படை. அவர்களை மெருகேற்றுவது எதிர்காலத்தில் நல்ல சமுதாயத்துக்கு வழிவகுக்கும்," என்று திருவாட்டி சுவா குறிப்
பிட்டார்.
நிலையத்தின் திறப்பு நிகழ்வின்போது இணைப் பேராசிரியர் ஃபைசால், "உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய சிங்கப்பூரர்களிடையே விருப்பம் உள்ளது. 'எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம்' பொதுமக்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கு அதற்கான தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது," என்றார்.
ஈசூனில் இருக்கும் அந்த நிலையத்தில் செயல்படும் 'கேம்பஸ்இம்பாக்ட்' திட்டம் 7 முதல் 17 வயதுக்குட்பட்ட 150 பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்தல், நடன சிகிச்சை, ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகளில் ஆதரவு வழங்குகிறது.
எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழியர் நிலையம் போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளை அமைப்பது 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் அத்தகைய 14 நிலையங்களில் 10,000க்கு மேற்பட்ட தொண்டூழியர்கள் 71,000க்கு மேற்பட்டவர்களுக்கு சேவை வழங்கி வருகின்றனர்.
நாட்டின் 24 நகரங்களிலும் 2022ஆம் ஆண்டுக்குள் அத்தகைய நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் அங்கமாக இந்த நிலையம் அமைகிறது.

