போலி என சந்தேகிக்கப்படும் சுவாசக் கருவிகளை இணையம் வழியாக விற்பனை செய்வதன் தொடர்பில் 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக இத்தகைய குற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 41,000க்கும் அதிகமான போலி சுவாசக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மருத்துவ தர சாதனம் கொவிட்-19க்கு எதிரான போரில் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து அந்த ஆடவர் கொண்டு வந்திருக்கலாம் என போலிசாரும் சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
கடந்த ஆண்டு மே மாதம் கொவிட்-19 தொடர்புடைய பொருள்கள் எனக் குறிப்பிட்டு இணையம் வழியாக விற்பனை செய்யப்பட்ட 1,700க்கும் அதிகமான பொருள்களை ஆணையம் நீக்கியது. அவற்றில் 47 விழுக்காட்டுப் பொருள்கள் பரிசோதனைச் சாதனங்கள், சுவாசக் கருவிகள் போன்ற மருத்துவ சாதனங்கள்.
கொரோனா கிருமித்தொற்று காலத்தில் மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக்கொண்டு இத்தகைய போலிப் பொருள்களை விற்ற 1,600க்கும் அதிகமான விற்பனையாளர்கள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இம்மாதம் 12ஆம் தேதி குற்றவியல் விசாரணைத் துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போலி வர்த்தக முத்திரை கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சுவாசக் கருவிகளின் சந்தைவிலை $201,000க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட சுவாசக் கருவிகள் போலியானவையா என்பதை உறுதி செய்யப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
சுகாதாரப் பொருள்கள் சட்டத்தின்கீழ் போலி சுகாதாரப் பொருள்களை இறக்குமதி செய்வது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு $100,000 வரை அபராதம், மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். விசாரணை தொடர்கிறது.
வர்த்தக முத்திரைகள் சட்டத்தின்கீழ், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அறிவுசார் சொத்துரிமை மீறல்களில் ஈடுபடுவது கடும் குற்றமாகக் கருதப்படும் என போலிசார் எச்சரித்துள்ளனர்.